முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்து பத்திரிகை மற்றும் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2012      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஆக.7 - நடிகர் விஜயகாந்த் மீதும், இந்து ஆங்கில பத்திரிகை மீதும் முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் சென்னை மாநகர அரசு வழக்கறிஞர் ஜெகன் தாக்கல் செய்த மனுவின் விவரம் வருமாறு:-

கடந்த 1-ந் தேதி வெளியிட்ட இந்து பத்திரிகையில், ஜெயலலிதா தனது அரசாங்கத்தை அறிக்கை மூலம் நடத்துகிறார்- விஜயகாந்த் குற்றச்சாட்டு என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இந்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது, அவதூறானது, அடிப்படை ஆதாரமற்றது. முதலமைச்சர் தனது சட்டப்பூர்வமான கடமைகள் மற்றும் அலுவலக பணிகளை விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமைகளில்கூட செய்கிறார். 

அவர் தனது அரசாங்கப் பணிகளை திறம்பட செய்து வருகிறார். கோடநாட்டில் தங்கியிருந்தபோதும், அலுவலக கோப்புகளை பார்க்கத் தவறியது கிடையாது. முதலமைச்சர் நீண்ட விடுப்பில் இருப்பதாக கூறுவது நியாயமற்றது இந்த குற்றச்சாட்டை ஆராயாமல் கண்மூடித்தனமாக வெளியிட்ட இவர்கள் அவதூறு குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளனர். மக்களுடைய நலனுக்காக முதலமைச்சர் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். 

இவர்களது குற்றச்சாட்டானது உள்நோக்கம் கொண்டது. அரசு அதிகாரிகளும், அலுவலர்களும் முதலமைச்சரின் கீழ் திறம்பட செயலாற்றி வருகின்றனர். இந்த விபரம் எதிர்கட்சி தலைவரான விஜயகாந்துக்கு நன்றாக தெரியும். அவருக்கு தெரிந்திருந்தும் முதலமைச்சர் மீது வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் குற்றம் சாட்டியுள்ளார். 

எனவே, இந்த செய்தியை வெளியிட்ட இந்து பத்திரிகை ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர்கள் மீதும், குற்றச்சாட்டை சுமத்திய விஜயகாந்த் மீதும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவிரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony