முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை கலெக்டருக்கு எதிராக பொய்புகார் கோட்டாட்சியர் மாற்றம்: தேர்தல் கமிஷன் அதிரடி

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 4 - தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்டு மதுரை கலெக்டருக்கு எதிராக பொய் புகார் கொடுத்த கோட்டாட்சியரை அதிரடியாக தேர்தல் கமிஷன் இடமாற்றம் செய்துள்ளது. இதேபோல், மதுரையில் தி.மு.க.வுக்கு ஆதரவாக செயல்பட்ட உளவு பிரிவு உதவி கமிஷனரும் மாற்றப்பட்டுள்ளார். இது பற்றி விபரம் வருமாறு:- தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து தி.மு.க. காங்கிரஸ் கூட்டணிக்குள் நடக்கும் குத்துவெட்டுக்கள் காரணமாக பிரச்சாரம் செய்வதிலும், வேட்பாளர் பெயர் அறிவிப்பதிலும், ஏகப்பட்ட குளறுபடி காரணமாக தாமதமாக தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியினர் பிரச்சாரத்தை ஆரம்பித்தனர். மறுபுறம் அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உருவாகாமல் தடுப்பதற்காக உளவு பிரிவு முதல் பல்வேறு பொய் பிரச்சாரங்களை தி.மு.க. பயன்படுத்தியது. இவை அனைத்தையும் மீறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றிகரமாக அமைந்து கூட்டணியில் உள்ள அனைத்து கட்சியினரும் பிரச்சாரத்தில் வேகமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கினறனர்.

தமிழக தேர்தல் வரலாற்றில் திருமங்கலம் இடைத்தேர்தல், ஜனநாயகத்திற்கு சவால் விடப்பட்டு வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டு நடந்த தேர்தல் இதேபோல், கடந்த 5 ஆண்டுகளில் உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் தி.மு.க.வினர் காங்கிரஸ் உதவியோடு மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியிலிருந்த காரணத்தினால் அராஜகமான தேர்தல்களை நடத்தி குறுக்கு வழியில் வெற்றியும் பெற்றனர்.

தமிழகத்தின் நேர்மையான தேர்தல் அதிகாரியாக இருந்த நரேஷ்குப்தா தேர்தலில் தில்லுமுள்ளு செய்த தி.மு.க.வினர் மேல் நடவடிக்கை எடுக்க முனைந்தபொழுது கருணாநிதி தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தாவை பகீரங்கமாக மிரட்டும் சம்பவமும் நடைபெற்றது. உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க.வினர் நடத்திய அராஜகத்தை நீதிமன்றமே கண்டிக்கும் அவல நிலையும் நடந்தது. 

கடந்த 5 ஆண்டுகளில் தி.மு.க.வினர் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் அனைத்து மட்டங்களிலும் நடந்தது. காவல் துறை அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் கருணாநிதி குடும்பத்தின் கடைக்கோடி உறவினர்களுக்குக்கூட பயந்து சலாம் போடும் நிலை இருந்தது. தென் மாவட்டங்களில் கருணாநிதியின் மூத்த மகன் அழகிரியின் ஆதிக்கம் கொடிகட்டி பறந்தது. தென் மாவட்டங்கள் முழுவதும் சிற்றரசர் போல் அழகிரி வலம்வந்தார். தேர்தலில் தில்லுமுல்லு செய்து வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணத்தை லஞ்சமாக கொடுத்து வாக்குகளை கைப்பற்றும் திட்டத்திற்கு ``அழகிரி பார்முலா'' என்று தி.மு.க.வினர் பெருமையாக சொல்லிக்கொண்டனர். 

இந்த தேர்தலில் இத்தகைய நிகழ்வுகளை கணக்கில் எடுத்துக்கொண்ட தேர்தல் ஆணையம் ஆரம்பம் முதலே தமிழக சட்டமன்றத் தேர்தல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் அனைத்து கட்சி தலைவர்களையும் கூட்டிய தேர்தல் ஆணையம் தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய முறைகள், தவிர்க்கவேண்டிய முறைகள், நேர்மையாக தேர்தல் நடத்த ஒத்துழைக்கும் படி அனைத்து கட்சிகளையும் கேட்டுக்கொண்டது.  அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு தருவதாக உறுதியளித்தனர்.

தி.மு.க.வினர் வழக்கம்போல் காவல்துறை, கலெக்டர்கள், அரசு அதிகாரிகள் நமக்கு சாதமாக இருப்பார்கள் என்ற எண்ணத்தில் தெம்பாக தங்களுடைய திருமங்கலம் பார்முலாவை அமுல் படுத்தலாம் என்ற எண்ணத்தில் இருந்தனர். அதற்கு வசதியாக தமிழக டிஜிபி, உளவுப்பிரிவு தலைவர், தமக்கு வேண்டிய மாவட்ட கலெக்டர்களை பயன்படுத்தவும் செய்தனர். இது பற்றி அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலுவான புகாரை தேர்தல் ஆணையத்திடம் அளித்தனர். காவல் துறை தலைவர், உளவுப்பிரிவு தலைவர், குறிப்பிட்ட கலெக்டர்கள்  ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் அளித்தனர். அந்த புகாரை அடுத்து தேர்தல் ஆணையம் அதிரடியாக காவல்துறை டிஜிபி, உளவுபிரிவு தலைவர், பல்வேறு மாவட்டங்களின் கலெக்டர்களை மாற்றியது. அப்படி மாற்றியதில் முக்கியமான மாற்றமாக அழகிரிக்கு ஜதகமாக செயல்பட்டு வந்த கிரானைட் ஊழல் பற்றி துளியும் கண்டுகொள்ளாத மதுரை கலெக்டர் காமராஜ் மற்றும் காவல்துறை ஆணையர் பாரி ஆகியோரும் அடங்குவர். பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் கடுமையான வாகனச்சோதனைகளை நடத்தி கோடிக்கணக்கில் பணத்தை பிடித்தது. 

இந்த நடவடிக்கைகளால் மிரண்டு போன கருணாநிதி குய்யோ முறையோ என்று ஒப்பாரி வைத்தார். எதிர்க்கட்சிகளை தேர்தலில் ஜெயிக்க வைப்பதற்கு ஆணையம் துணை போவதாக அறிக்கை விட்டார். தமிழகத்தில் மெர்ஜென்சி நிலவுவதாக  அறிக்கை விட்டார். தேர்தலை தனது இஷ்டப்படி தனது ஜால்ரா காவல்துறை அரசு அதிகாரிகளை வைத்து பணத்தை தண்ணீராக இரைத்து ஜெயித்து விடலாம் என்ற கருணாநிதியின் கனவு தேர்தல் தேர்தல் கமிஷனின் இத்தகைய நடவடிக்கைகளால் உடைந்து போனது. 

இது பற்றி ஆவேசமாக அறிக்கை விட்டு நீதிமன்றத்தில் வேண்டியப்பட்டவர்களை வைத்து வழக்கும் போடவைத்தார். ஆனால் நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணையத்திற்கு சாதகமாக அமைந்தது. மதுரையில் நேர்மையான கலெக்டரான சகாயத்தை தேர்தல் ஆணையம் நியமித்தது. சகாயம் நேர்மையான நடவடிக்கையில் பேர்போன கலெக்டர். துளியும் ஆளுங்கட்சியின் மிரட்டலுக்கு அஞ்சாதவர். அவருடைய நேர்மையான நடவடிக்கைகள் அழகிரியின், மதுரை மாவட்ட தி.மு.க.வினர் செயல்பாடுககளுக்கு பெரும் இடையூராக இருந்தது. 

இதனால் மாவட்ட கலெக்டருக்கு எதிராக அழகிரி அறிக்கைவிட்டார். அடிபொடிகளை வைத்து அறிக்கைகள் விட்டார். ஆனாலும் மதுரையில் இவர்களுடைய பாச்சா பலிக்கவில்லை. நினைத்தபடி பணபட்டுவாடாவை நடத்த முடியவில்லை.  மதுரையில் மட்டும் தமிழ்நாட்டிலேயே அதிக தொகையை ரூ.3.8கோடியை வாகன சோதனையில் அதிகாரிள் பிடித்தனர். இதனால் மதுரை கலெக்டரை எப்படியாவது மாற்றவேண்டும் என்று அழகிரி தனக்கு வேண்டியப்பட்ட தி.மு.க. குடும்பத்தை சேர்ந்த சுகுமாறன் என்ற கோட்டாட்சியர் மூலம் மதுரை கலெக்டர் சகாயத்திற்கு எதிராக பெரிய புகாரை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாரிடம் அளிக்க வைத்தனர். 

தன்னை தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் சகாயம் தூண்டுவதாகவும், தனக்கு அதனால் மனஉலைச்சல் ஏற்பட்டு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், கூறி மருத்துவமனையில் சென்று சுகுமாரன் படுத்துக்கொண்டார். கோட்டாட்சியர் சுகுமாரன் படுத்த படுக்கையாக மருத்துவமனையில்  இருப்பதுபோன்ற புகைப்படத்தை குடும்ப தொலைக்காட்சி முதல் பல்வேறு செய்திதாள்களில் வெளி வந்தது. அழகிரி ஒரு படி மேலே போய் உள்துறை செயலாளரிடம் மாவட்ட கலெக்டரை பற்றி புகார் அளித்தார். 

இதனிடையே இந்த புகார்களை மறுத்த கலெக்டர் சகாயம் தான் கோட்டாட்சியரை தி.மு.க.வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி கூறவில்லை என்று மறுத்தார். கோட்டாட்சியர் சுகுமாரனின் புகார் உள்நோக்கம் கொண்டது என்ற உண்மையை புரிந்து கொண்ட தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் அதிரடியாக கோட்டாட்சியர் சுகுமாரனை, மதுரை கிழக்கு பகுதியில் இருந்து மாற்றல் செய்து வேறு மாவட்டத்தில் உடனடியாக நியமிக்கும்படி உத்தரவிட்டது. 

மேலும் தமிழகத்தில் உளவு பிரிவு தலைவர் ஜாபர்சேட் தமிழகம் முழுவதும் தி.மு.க.விற்கு வேலை பார்த்ததினால் அவரை மாற்றியது போல் மதுரை மாவட்டத்தில் உளவுபிரிவு உதவி கமிஷனராக இருந்த குமாரவேல் என்பவர் தி.மு.க.வினருக்கு ஆதரவாக செயல்படுவதாக அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தது. இதன் அடிப்படையில் உளப்பிரிவு உதவி கமிஷனர் குமாரவேலும் நேற்று அதிரடியாக சென்னைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தொடர்ச்சியான இந்த நடவடிக்கைகளால் மதுரை பகுதி மக்கள்  மற்றும் எதிர்க்கட்சிகள் மதுரையில் இனி நேர்மையான தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே சென்னையில் தேர்தல் அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி அளிப்பதை பார்வையிட வந்த தலைமை தேர்தல்  அதிகாரி பிரவீன்குமார் இந்த சம்பவம் பற்றி கூறுகையில் கோட்டாட்சியர் சுகுமாரனை தற்காலியமாக மாற்றம் செய்துள்ளோம். விசாரணை செய்து உண்மையினை கொண்டு வருவோம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்