முக்கிய செய்திகள்

வறுமை அதிகரிப்பு பணவீக்க உயர்வுக்கு மத்திய அரசே காரணம் - ராஜ்நாத்சிங்

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      இந்தியா
rajnath-singh

 

காஸியாபாத், ஏப்.- 5 - நாட்டில் வறுமை அதிகரித்துக்கொண்டே போவதற்கும் பணவீக்க உயர்வுக்கும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கொள்கைகளே காரணம் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் ராஜ்நாத்சிங் குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க. முன்னாள் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜ்நாத்சிங் நேற்று உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத் சென்றார். அங்கு பல்வேறு ஊழியர் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். அப்போது  நாட்டில் வறுமை அதிகரித்துக்கொண்டே போவதற்கும், பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே போவதற்கும் மத்திய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று அவர் தெரிவித்தார். பொருளாதாரம் மற்றும் நிதி துறைகளில் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தவறான கொள்கைகளை உருவாக்கி உள்ளது. அதனால்தான் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன என்றும் அவர் கூறினார். இதுபோன்ற தவறான் கொள்கைகளால் ஏழைகளின் வளர்ச்சி வீழ்ச்சி அடைந்து வருகிறது. அதே நேரத்தில் வசதி படைத்தவர்கள் மட்டும் மேலும் மேலும் வளர்ச்சி அடைகிறார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டினார். 

நாட்டில் விவசாயிகளும், நெசவாளர்களும் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கிறார்கள் என்றும், தொலை தூரங்களில் உள்ள இவர்களின் குடும்ப முன்னேற்றத்திற்கு தேவையான திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை என்றும் சிங் குற்றம் சாட்டினார். ஏழை குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் வேலை மற்றும் கல்விக்காக எந்த ஒரு சரியான திட்டத்தையும் மத்திய அரசு செயல்படுத்தவில்லை என்றும் அவர் கூறினார். தனது எம்.பி. தொகுதி நிதியில் இருந்து தனது தொகுதிக்கு உட்பட்ட சாலை கட்டுமானப் பணிகள் செயல்படுத்தப்படும் என்று அவர் உறுதியளித்தார். காஸியாபாத்தில் பா.ஜ.க. சார்பில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். உத்தரபிரதேச மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பா.ஜ.க.வை பலப்படுத்தும் விதமாக இவர் உத்தரபிரதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவருகிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: