முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மு.க.அழகிரியின் முயற்சி முறியடிக்கப்பட்டு ஒத்தக்கடை யானைமலை காப்பாற்றப்படும்- ஜெயலலிதா உறுதி

திங்கட்கிழமை, 4 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை, ஏப்.- 5 - கிரானைட் கற்களை வெட்டியெடுக்க முயற்சிசெய்த மு.க.அழகிரியின் திட்டம் முறியடிக்கப்பட்டு ஒத்தக்கடை யானைமலை காப்பாற்றப்படும். அந்தப் பகுதியில் உள்ள மக்களை காப்பாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அய்யர்பங்களாவில் நடந்த பிரச்சார கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உறுதியளித்தார். மதுரை புறநகர் மாவட்டம் மேற்கு ஒன்றியத்தில் உள்ள அய்யர்பங்களாவில் நேற்று மாலை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா, அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் அங்கு கூடியிருந்த பொதுமக்களிடையே பேசியதாவது:- தமிழ்நாட்டை ஏகபோகமாக கொள்ளையடித்துவரும் ஒரு குடும்ப கும்பலிடம் இருந்து மீட்டு தமிழகத்தை காப்பாற்ற வரும் தேர்தல் ஒரு முக்கிய கருவியாக உள்ளது. இதனை பயன்படுத்தி நீங்கள் கருணாநிதியின் கொள்ளைக் கும்பலுக்கு முடிவுகட்டவேண்டும். கருணாநிதி தமிழகத்தை சூறையாடி உலக பெரும் பணக்காரர்களாக தனது குடும்பத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளார். அண்மையில் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கருணாநிதி பேரன் கலாநிதி மாறன் 310 வது இடத்தில் உள்ளார் என்று செய்தி வெளியாகி உள்ளது. ஒரு பேரனுக்கு மட்டும் இந்த அளவுக்கு சொத்து இருந்தால், கருணாநிதியின் மகன்கள், மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு உள்ள சொத்துக்களை கணக்கிட்டால் உலகின் மிகப்பெரிய பணக்கார குடும்பம் கருணாநிதியின் குடும்பமாகத்தான் இருக்கும். தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தாமல் தனது குடும்ப வளர்ச்சிக்காக திட்டம் தீட்டி ஆட்சியை நடத்திவரும் கருணாநிதிக்கு இந்த தேர்தலில் நீங்கள் தக்க பாடம் புகட்ட வேண்டும். 

மக்கள் பணத்தை சுரண்டி ஒரு ரவுடி சாம்ராஜ்யம் நடத்தி பல கோடி ஊழல் செய்து, சம்பாதித்துவரும் கருணாநிதியையும், அவரது தேச விரோத சக்திகளையும் வேரோடும் வேரடி மண்ணோடும் இந்த தேர்தல் மூலம் நீங்கள் வீழ்த்தவேண்டும். பொருளாதார வளர்ச்சியிலும், சட்டம் ஒழுங்கு பராமரிப்பிலும் இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக இருந்த தமிழகத்தை இப்போது கருணாநிதி பின்னோக்கி தள்ளிவிட்டார். தமிழகத்திற்கு ஒரு லட்சம் கோடி கடன் சுமை என்பதுதான் கருணாநதி ஆட்சியின் சாதனையாக உள்ளது.  இந்த தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சட்டத்தின் ஆட்சி தமிழகத்தில் நடைபெறும். 

இந்த பகுதிவாழ் மக்களுக்கு பயன்பட்டு வரும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில்கொண்டு இந்த பகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படும். ஒத்தக்கடை யானைமலையை உடைத்து சிற்பநகரம் உருவாக்குகிறோம் என்று கூறி, அதிலுள்ள கிரானைட் கற்களை வெட்டியெடுக்க கருணாநிதியின் மகன் மு.க.அழகிரியின் கும்பல் முயற்சி செய்துவருவதாக எனக்கு தகவல் வந்துள்ளது. எனவே அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன், மு.க.அழகிரியின் முயற்சி முறியடிக்கப்பட்டு யானைமலை காப்பாற்றப்படும். அங்குள்ள மக்களை பாதுகாக்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இப்பகுதிவாழ் மக்களுக்கு உள்ள அடிப்படை வசதிகள், பிரச்சனைகள் உடனடியாக தீர்த்துவைக்கப்படும். ஒரு ரவுடி கும்பல் தமிழ்நாட்டை அடக்கி ஆள்வதற்கு இந்த தேர்தலில் நீங்கள் முற்றுப்புள்ளி வைத்திட அ.தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். மதுரை கிழக்கு தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.தமிழரசன், திருமங்கலம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எம்.முத்துராமலிங்கம், மேலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.சாமி, சோழவந்தான் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.வி.கருப்பையா ஆகியோருக்கு எம்.ஜி.ஆர்.கண்ட சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன். திருப்பரங்குன்றம் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் ஏ.கே.டி.ராஜாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னத்தில் வாக்களித்து அவரை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார். 

இந்த பிரச்சார கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மதுரை  கிழக்கு தொகுதிக் கழக செயலாளர் மா.இளங்கோவன், மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன், மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், மாவட்ட பேரவை இணைச் செயலாளர் கருப்பணன், மேற்கு ஒன்றியக்கழக செயலாளர் முருகேசன், வழக்கறிஞர் கோபி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!