முக்கிய செய்திகள்

சரக்கு சேவை வரி சட்டத்தை தாக்கல் செய்ய பா.ஜ.க. எதிர்ப்பு

திங்கட்கிழமை, 21 பெப்ரவரி 2011      அரசியல்

 

புதுடெல்லி. பிப். 21-மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் சரக்கு  சேவை வரி சட்ட திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல்  செய்ய மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பாரதீய  ஜனதாக்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரியை அமுல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான சட்ட திருத்த மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்  தாக்கல் செய்ய மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்ற நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க.வின் ஆதரவு மிகவும் முக்கியமானது. 

பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்த மசோதாவை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் நிதி சம்பந்தமான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவருமான  யஷ்வந்த் சின்கா கூறுகையில் மத்திய அரசு தவறான முறையில் செயல்பட முயற்சி செய்கிறது என்றார்.

குஜராத்தில் ஒரு அமைச்சருக்கு எதிராக பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.  அந்த அமைச்சரை நீக்க வேண்டும் என்ற காரணத்திற்காக பா.ஜ.க. இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளதற்கும் யஷ்வந்த் சின்கா கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல் இந்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய  அரசு திட்டமிட்டுள்ளது என்பதற்காகத்தான் இந்த மசோதாவை தாக்கல்  செய்ய பா.ஜ.க. எதிர்ப்பு தெரிவிக்கிறதே ஒழிய மற்ற காரணம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: