முக்கிய செய்திகள்

ஹஸரே உண்ணாவிரதம் எதிரொலி பேச்சுவார்த்தை தொடங்கியது

வியாழக்கிழமை, 7 ஏப்ரல் 2011      இந்தியா
Kapil-Sibal

புதுடெல்லி,ஏப்.- 8 - ஹஸரேவுடன் தொடர்பு கொள்ளும் வகையில் அவருடைய ஆதரவாளர்களுடன் மத்திய அரசு நேற்று பேச்சுவார்த்தையை தொடங்கியது.  நாட்டில் ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வலியுறுத்தி பிரபல காந்தீயவாதியும் சமூக சேவகருமான ஹஸரே சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கியுள்ளார். நேற்று அவர் 3-வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். இதனையொட்டி அமைச்சர் கபில் சிபலை அனுப்பி ஹஸரே ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஹஸரே ஆதரவாளர்களான சுவாமி அக்னிவேஷ்,அரவிந்த் கெஜரிவால் ஆகியோர்களுடன் அமைச்சர் கபில் சிபல் பேச்சுவார்த்தையை தொடங்கினார். அப்போது லோக்பால் மசோதாவுக்கான நகலை தயார் செய்வதில் கூட்டு கமிட்டி அமைப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பு கபில் சிபல் வீட்டில் நடைபெற்றது. பேச்சுவார்த்தையின்போது பிரச்சினைக்கு தீர்வுகாண வழிமுறைகள் குறித்து முடிவு செய்யப்பட்டதாக கபில் சிபல் தெரிவித்தார். ஆனால் அந்த வழிமுறைகள் என்ன என்பதை கபில் சிபல் கூற மறுத்துவிட்டார். இந்த வழிமுறைகளை உருவாக்குவதில் அனைவரும் சேர்ந்து பணியாற்றி வருகிறோம் என்றும் கபில் சிபல் மேலும் கூறினார். நாங்கள் ஹஸரேவுடன் தகவல் தொடர்பை ஏற்படுத்தியுள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையானது ஆக்கப்பூர்வமாக இருந்தது. மசோதாவுக்கான விதிமுறைகள் அதாவது ஷரத்துக்கள் குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யவில்லை. நாங்கள் மீண்டும் சந்தித்து பேசுவோம் என்று கபில் சிபல் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். ஊழலை அடியோடு ஒழிக்க நடவடிக்கை எடுக்க விரும்புகிறோம். ஊழலில் இருந்து விடுபட நாங்கள் விரும்புகிறோம். இந்த பேச்சுவார்த்தையில் சிவில் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவும் விரும்புகிறோம் என்று கபில்சிபல் மேலும் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்: