ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு தொடரும்

சனிக்கிழமை, 22 செப்டம்பர் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. செப். 22 - மத்தியில்  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு தங்களது  சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு தொடரும் என்று அக்கட்சியின்  நிறுவன  தலைவர்  முலாயம்சிங் யாதவ்  கூறியுள்ளார். சில்லறை வணிகத்தில்  அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி,  டீசல் விலை உயர்வு,  சமையல் கியாஸ் சிலிண்டர் மீது கட்டுப்பாடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து  திரிணமுல்  காங்கிரஸ் கட்சி நேற்று விலகியது.

மம்தா பானர்ஜி  தலைமையிலான திரிணாமுல்  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  6 அமைச்சர்களும்  தங்களது  பதவிகளை  ராஜினாமா செய்துள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில்  சமாஜ்வாடி  கட்சியின்  தலைவர் முலாயம் சிங் யாதவ் நேற்று  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர்  கூறுகையில்  மத்தியில்  காங்கிரஸ்  தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு  தாங்கள்  தொடர்ந்து ஆதரவு தருவோம் என்றார்.

- எங்களது ஆதரவு என்பது தெளிவானது.வகுப்புவாத சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து விடக்கூடாது என்பதற்காகவே நாங்கள்  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில்  நாங்கள் அங்கம் வகிக்கவில்லை. வெளியில் இருந்துதான் நாங்கள் ஆதரவு அளித்து வருகிறோம். இருந்தாலும் வகுப்புவாத  சக்திகள்  ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் நாங்கள்  இந்த அரசுக்கு ஆதரவு அளிக்கிறோம் என்றும் அவர்  கூறினார்.

முலாயம்சிங் யாதவின் இந்த அறிவிப்பு  காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நிம்மதி பெருமூச்சை  அளித்துள்ளது.

தற்போது திரிணமுல் காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதால்  ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலம் லோக் சபையில் 273 ல் இருந்து 254 ஆக குறைந்துள்ளது.

 என்றாலும்  சமாஜ்வாடி ( 22 ) பகுஜன் சமாஜ் ( 21 ) மற்றும் சில  சுயேச்சைகளையும்  சேர்த்து பார்க்கும் போது  545 உறுப்பினர்களை கொண்ட லோக் சபையில்  ஐ.மு.கூட்டணியின் பலம் கிட்டத்தட்ட 300 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திரிணமுல்  காங்கிரஸ்  கட்சியை போல ஐ.மு.கூட்டணி அரசுக்கான ஆதரவை வாபஸ் பெறுவீர்களா? என்று கேட்ட போதுதான்  முலாயம்சிங்  ஆவேசமாக எதிர் கேள்வி போட்டார்.  

ஆதரவை வாபஸ் பெற வேண்டுமா? எதற்கு? என்று  அவர் கேள்வி எழுப்பினார்.

உரிய  காலத்திற்கு முன்பாகவே பாராளுமன்றத்திற்கு  தேர்தல் வருவதை ஆதரிக்கிறீர்களா? என்று கேட்டதற்கு  இந்த கேள்வி எப்படி எழுந்தது?  காங்கிரஸ் கட்சியிடம் கேட்டீர்களா?  அவர்கள்  சீக்கிரம் தேர்தல்  வரும் என்று  சொன்னார்களா?  என்றும் முலாயம் சிங் கேள்வி எழுப்பினார்.

பாராளுமன்றத்திற்கு  சீக்கிரம் தேர்தல் வந்தால் அதற்கு  நீங்கள்தான் பொறுப்பு என்று  கூறுகிறார்களே என்று கேட்டதற்கு  அதற்கு  நாங்கள் பொறுப்பாக  முடியாது என்றும் அவர்  கூறினார்.

ஐ.மு.கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்தாலும் கூட  சில்லறை வணிகத்தில்  அன்னிய முதலீடு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை  தங்களது  கட்சி தொடர்ந்து எதிர்க்கிறது என்றும் அவர்  கூறினார்.

Darbar Public Review | FDFS | Rajinikanth, Suniel Shetty, Nayanthara

இதை ஷேர் செய்திடுங்கள்: