முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பிரச்சாரத்தை நிறைவு செய்தார் ஜெயலலிதா

திங்கட்கிழமை, 11 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.12 - அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து அனல் பறக்கும் சூறாவளி பிரச்சாரம் செய்து வந்த ஜெயலலிதா இறுதி நாளான நேற்று சென்னையில் உள்ள அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து நிறைவு செய்தார்.

இது பற்றி விபரம் வருமாறு:-

ஏற்கனவே சென்னையில் 2 கட்ட பிரச்சாரத்தை செய்த ஜெயலலிதா நிறைவு நாளான நேற்று சென்னையில் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, துறைமுகம், ராயபுரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், பெரம்பூர், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்து நேற்று மாலை 5 மணிக்கு தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார். 

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே.13-ந் தேதி அன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில் அ.தி.மு.க., தே.மு.தி.க. சி.பி.எம்., சி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னேற்ற கழகம், சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி அமைத்து  போட்டியிட்டுது. கடந்த மார்ச் 24-ந் தேதி ஸ்ரீரங்கத்தில் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு பிரச்சாரத்தை துவங்கிய ஜெயலலிதா  தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக சூறாவளி பிரச்சாரம் செய்தார். சென்னையில் போட்டியிடும் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்காக 2 கட்ட பிரச்சாரத்தை முடித்துக்கொண்ட ஜெயலலிதா பிரச்சாரத்தின் இறுதி நாளாளன நேற்று சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் தமீமுன் அன்சாரிக்காக திருவல்லிக்கேணி ஐஸ்ஹவுஸ் பகுதியில்  மதியம் 12 மணி அளவில் பிரச்சாரத்தை துவக்கிய ஜெயலலிதா கடற்கரை சாலை வழியாக ராயபுரம் கல்மண்டபம் அருகே அ.தி.மு.க. வேட்பாளர் டி.ஜெயக்குமாரை ஆதரித்து வாக்கு சேகரித்தார். 

பின்பு திருவொற்றியூர் நெடுஞ்சாலை வழியாக திருவொற்றியூர் தேரடியை அடைந்த ஜெயலலிதா அங்கு அ.தி.மு.க. வேட்பாளர் குப்பனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அதன்பின் தண்டையார் பேட்டை வைத்தியநாதன் பாலம் வழியாக பிரச்சாரம் செய்து கொருக்குப்பேட்டையில் ஆர்.கே.நகர் வேட்பாளர் வெற்றிவேலுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு எம்.கே.பி.நகர், அசோக் பில்லர் அருகே சி.பி.எம். வேட்பாளர் ஆர்.சவுந்தர்ராஜனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். 

பின்பு பேசின் பாலம் அருகே வாக்கு சேகரித்த ஜெயலலிதா மின்ட் தங்க சாலை வழியாக பிராட்வே செல்லும் பிரகாசம் சாலையில் துறைமுகம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் பழ.கருப்பையாவிற்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். பின்பு பாரிமுனை கடற்கரை சாலை வழியாக நொச்சிகுப்பம் பின்புறம் உள்ள டுமில் குப்பத்தில் மயிலாப்பூர் தொகுதி அ.தி.மு.க.வேட்பாளர் ராஜலட்சுமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து தன் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டார்.

ஜெயலலிதா செல்லும் வழியெங்கும் பொதுமக்களும், பெண்களும், அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி தொண்டர்களும் திரளாக நின்று உற்சாகமாக வரவேற்றனர். வழியெங்கும் கட்சி சின்னங்கள், கொடிகள், பதாகைகளை ஏந்தி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். பல இடங்களில் தொண்டர்கள் பூங்கொத்துக்களை வழங்கியும், ஆரத்தி தட்டு மற்றும் பூரண கும்ப மரியாதையும் அளித்து வரவேற்றனர். 

ஒளதுறைமுகம் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு ஜெயலலிதா வந்தபோது அர்சகர்கள் திரண்டு வேதம் முழங்க வாழ்த்து தெரிவித்தனர். பல இடங்ளில் கரகாட்டம், பேண்டு வாத்தியம் முழங்க வரவேற்பு அளித்தனர். ஐஸ்ஹவுஸ் பகுதியிலும், ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட நோதாஜி நகரிலும் ஏராளமான முஸ்லீம் பெண் திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்றனர். தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலத்தில் வழக்கறிஞர்கள் கை கோர்த்து நின்று ஜெயலலிதாவிற்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர்.  ராயபுரம் தொடங்கி திருவொற்றியூர் வரை வழியெங்கும் மீனவர்களும், மீனவ சமுதாய பெண்களும் திரளாக சாலையோரம் நின்று ஜெயலலிதாவிற்கு வரவேற்பு அளித்தனர். 

மீனவர்களுக்கு படகுகள் வாங்க மானியத்துடன் கடன், மீனவர்கள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்ட 45 நாட்களுக்கு உதவித்தொகை 2 ஆயிரமாக உயர்த்தி தருவது போன்ற அறிவிப்புகளை ஜெயலலிதா அறிவித்தபோது மீனவர்கள் பெரும் கரகோஷத்துடன் வரவேற்றனர்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஊதியத்தை வழங்க பரிசீலிக்கப்படும் என்ற அறிவிப்பு அரசு ஊழியர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜெயலலிதா தமிழகத்தை காக்க ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருந்து தமிழகத்தை காக்க அ.தி.மு.க. கூட்டணிக்கு வாக்களிப்பீர்களா? என்ற கேள்வி எழுப்பிய போது கண்டிப்பாக செய்வோம் என்று பதிலளித்தனர்.

சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, குடிதண்ணீர் பிரச்சினை பற்றி ஜெயலலிதா பேசியதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. பிரச்சாரத்திற்கு ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஜெயலலிதா மக்கள் வெள்ளத்தில் நீத்தியபடி மெதுவாகதான் செல்ல முடிந்தது. மக்கள் வெள்ளத்தை விளக்கி வாகனத்தை செலுத்த பாதுகாவலர்கள் மிகுந்த சிரமப்பட்டனர். மைலாப்பூரில் ஜெயலலிதா பிரச்சாரத்திற்கு வந்தபோது மீனவ மக்கள் கடலுக்குள் படகுகளில்  பெரிய பெரிய கட்சிக்கொடிகளை கட்டி தங்கள் வரவேற்பை தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony