முக்கிய செய்திகள்

ஆ.ராசாவின் நீதிமன்ற காவல் மேலும் 2 நாட்கள் நீட்டிப்பு

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      ஊழல்
Rasa

புதுடெல்லி, ஏப்.14 - ஸ்பெக்ட்ரம் ஊழல் ஆ.ராசா மற்றும் இரண்டுபேரின் நீதிமன்ற காவல் மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு ஊழல் நடந்துள்ளதை அடுத்து தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை சி.பி.ஐ. அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இவரது அப்போதைய உதவியாளர்கள் சித்தார்த் பெகூரியா, சந்தோலியா ஆகியோரும் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஆரம்பத்தில் சி.பி.ஐ. காவலில் இருந்த இவர்கள் பிறகு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். அதன்படி ஆ.ராசாவும், அவரது உதவியாளர்களும் டெல்லியில் உள்ள பாதுகாப்பு அதிகம் உள்ள  திஹார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இவர்களது நீதிமன்ற காவல் நேற்று முடிவடைந்ததை அடுத்து இவர்கள் மூன்றுபேரும் நேற்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது இவர்களது நீதிமன்றக் காவலை வருகிற 15 ம் தேதிவரை (அதாவது மேலும் 2 நாட்களுக்கு) நீட்டித்து நீதிபதி ஷைனி  உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் 3 பேரும் காவல் வாகனத்தில் ஏற்றப்பட்டு திஹார் சிறைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு அவர்கள் சிறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: