முக்கிய செய்திகள்

வாக்குப்பதிவு எந்திரங்களை பாதுகாக்க துணை ராணுவம் வருகை

வியாழக்கிழமை, 14 ஏப்ரல் 2011      தமிழகம்
EC 7

 

சென்னை, ஏப்.14 - 234 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு முடிந்து மின்னணு எந்திரங்களை பாதுகாக்க 17 கம்பெனி துணை ராணுவம் வர உள்ளதாகவும், கடுமையான பாதுகாப்பு இருக்கும் என்றும் டி.ஜி.பி. போலோநாத் தெரிவித்தார். 

தமிழகம் முழுவதும் வாக்குப் பதிவு முடிந்ததும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டி.ஜி.பி. போலோநாத் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் சிறப்பான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது. பொதுமக்கள் ஆர்வமுடன் அமைதியான முறையில் வாக்களித்தனர். 70 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகள் பதிவாகி உள்ளது. எல்லா அலுவலர்களும் தங்கள் பணியை சிறப்பாக செய்தனர். காவலர்கள், பொதுமக்கள், பத்திரிகையாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள். தேர்தல் முடிவடைந்து விட்டது. வாக்குப்பதிவை விட வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பது கடினமான விஷயமல்ல. வாக்குச் சாவடியில் 1 நாள், 1 மாதம், 1 வருடம் பாதுகாப்பு என்பதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. 

234 தொகுதிகளின் வாக்குப் பதிவு எந்திரங்கள் 91 மையங்களில் வைக்கப்படும். ஒரு மாதம் முழுவதும் பாதுகாக்க இந்த மையங்களை ஒரு தொகுதிக்கு ஒரு டி.எஸ்.பி. தலைமையில் 40 போலீசார் வீதம் பாதுகாப்பார்கள். 17 கம்பெனி துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு வர உள்ளனர். அவர்கள் இந்த 91 மையங்களுக்கு பிரித்து அனுப்பப்படுவார்கள். மற்றபடி தடுப்புக்காவல், கண்காணிப்பு கேமரா, ஒளிபாய்ச்சும் விளக்குகள் என எல்லா வகைகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். 

 

இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்களுக்காக 6295 வழக்குகள் பதிவு செய்து உள்ளோம். வழக்குகளை 60 நாட்களுக்குள் முடித்து தண்டனை கொடுக்க முடிவு செய்துள்ளோம். இதுவரை ரூ.40 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் பறிமுதல் செய்துள்ளோம்.  இவ்வாறு டி.ஜி.பி. போலோ நாத் கூறினார். 

இதேபோல் கமிஷனர் ராஜேந்திரனும் சென்னையில் ஓரிரு இடங்களில் ஏற்பட்ட சில அசம்பாவித சம்பவங்கள் தவிர சிறப்பான முறையில்  அமைதியாக தேர்தல் நடந்தது என்று கூறினார். சென்னையில் உள்ள 17 தொகுதிகளுக்கு 1 தொகுதிக்கு 15 போலீசார் வீதம் 255 போலீசார் பாதுகாப்புக்கு இருப்பார்கள். துணை ராணுவ படையினர் வந்தவுடன் அவர்களிடம் பாதுகாப்பு ஒப்படைக்கப்படும். சென்னையில் 4 மையங்களில் வாக்குப் பெட்டிகள் வைத்து பாதுகாக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: