முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அழகர் 18-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார்

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2011      ஆன்மிகம்
Image Unavailable

 

மதுரை,ஏப்.16 - அழகர் மலையில் இருந்து கள்ளழகர் இன்று மாலை மதுரைக்கு புறப்படுகிறார். வருகிற 18 ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார்.இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரளுகிறார்கள். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா முடியும் தருவாயில் உள்ள நிலையில் அழகர் கோவில் சித்திரை திருவிழா முக்கிய கட்டத்தை நெருங்குகிறது. ஆண்டாளை திருக்கல்யாணம் செய்த இடம்தான் அழகர்கோவில். இந்த கோவில் பற்றியும், மலையை பற்றியும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரிபாடல் பாடப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்திலும் இந்த கோவிலில் உள்ள் பெருமாளையும், தீர்த்தங்கள் பற்றியும் பாடப்பட்டுள்ளது. ஆண்டாள் நாச்சியார் அமர்ந்த நிலையில் மணக்கோலத்தில் காட்சியளிப்பது இந்த கோவிலின் பெருமையாகும். இவ்வுளவு சிறப்பு பெற்ற இந்த கோவிலின் சித்திரை திருவிழா உலக பிரசித்தி பெற்றதாகும். அதிலும், சித்ரா பவுணர்மி அன்று அழகர் தங்க குதிரை வாகனத்தில் வைகையாற்றில் இறங்குவது முக்கிய நிகழ்ச்சியாகும்.

   சுந்தர்ராஜபெருமாள் இன்று மாலை 5.45 மணிக்கு கள்ளழகர் வேடம் பூண்டு  தங்கப்பல்லக்கில் மலையை விட்டு புறப்படுகிறார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்தகள் திரண்டு வந்து அழகரை வழியனுப்பி வைப்பார்கள். மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு அழகர் மூன்றுமாவடி வருகிறார். அங்கு பக்தர்கள் எதிர்கொண்டுஅழைக்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதன் பிறகு பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி இரவு 10.30 மணிக்கு தல்லாகுளம் பிரச்சன்ன வெங்கடாஜலபதி திருக்கோவிலில் எழுந்தருளுகிறார். இங்கு இரவு 1 மணிக்கு பெருமாள் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் சாத்துப்படி ஆனதும் திருவில்லிபுத்தூர் சூடிக்கொடுத்த நாச்சியார் ஆண்டாளுடைய திருமாலை அழகருக்கு அணிவிக்கப்படுகிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் துவங்குகிறது. 18 ம் தேதி (திங்கட்கிழமை) சுந்தர்ராஜபெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு தங்ககுதிரை வாகனத்தில் அமர்ந்து காலை 6.45 மணி முதல் 7 மணிக்குள் லட்சக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா கோஷம் விண்ணை பிழக்க வைகை ஆற்றில் இறங்குகிறார்.

   பிற்பகல்  12 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு வரும் அழகருக்கு பக்தர்களின் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகர் மீது ஒரே நேரத்தில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பதை பார்ப்பதற்கு கண்கோடி வேண்டும். இரவு 1 மணிக்கு அழகர் வண்டியூர் வீரராகவ பெருமாள்கோவிலில் எழுந்தருளுகிறார். இங்கு விடிய, விடிய அழகரை பக்தர்கள் தரிசிக்கிறார்கள். மறுநாள்(செவ்வாய்க்கிழமை) காலை 5 மணிக்கு திருமஞ்சனமும், ஏகாந்த சேவையும் நடக்கிறது. காலை 10 மணிக்கு வீரராகவ பெருமாள் கோவிலில் இருந்து சேஷ வாகனத்தில் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களில் எழுந்தருளி வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்திற்கு வருகிறார். அங்கு மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாபவிமோச்சனம் அளிக்கிறார். வைகை ஆற்றில் இருந்து புறப்படும் அழகர் இரவு 10 மணிக்கு ராமராயர் மண்டகப்படிக்கு வருகிறார். அங்கு விடிய,விடிய அழகரின் தசாவதார காட்சி நடைபெறுகிறது. அதிகாலை மோகனாவதாரத்துடன் புறப்படும் அழகர் பல்வேறு திருக்கண்களுக்கு சென்றுவிட்டு அனந்தராயர் பல்லக்கில் ராசாங்க கோலத்துடன் எழுந்தருளுகிறார். 21 ம் தேதி (வியாழக்கிழமை) ராமநாதபுரம் சேதுபதி மண்டபத்தில் இருந்து அதிகாலை 2 மணிக்கு பூப்பல்லக்கில் அழகர் மலையை நோக்கி புறப்படுகிறார். இந்த நிகழ்ச்சிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அழகரை தரிசிப்பார்கள்.

 

ரூ.1.50 கோடியில் அழகருக்கு புதிய தங்க குதிரை வாகனம்

 

அழகர் பெருமான்  வைகை ஆற்றில் இறங்கும் போது அமர்ந்து வரும் தங்க குதிரை பல ஆண்டுகளுக்கு முந்தையது. இந்த தங்க குதிரை வாகனம் பழுதடைந்து விட்டது. இதனால் புதிய தங்க குதிரை செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன் படி  ரூ. 1.50 கோடி மதிப்பில் தங்க குதிரை செய்யப்பட்டது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தான் குதிரைக்கு கண் அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று தங்க குதிரை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது.

 

அழகருக்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறப்பு

 

மதுரை வைகை ஆற்றில் அழகர் இறங்கும் போது எப்போதும் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் போது அணை வறண்டு குடிநீருக்கே தண்ணீர் இல்லாமல் இருந்தது. இதனால் அழகருக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. ஆனால் இந்த ஆண்டு வைகை அணையில் போதுமான அளவிற்கு தண்ணீர் உள்ளது. இதனால் அழகர் இறங்குவதற்காக தண்ணீர் திறந்து விட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதன் படி நேற்று  வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் இன்று மாலை அல்லது நாளை காலை மதுரையை வந்தடையும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்