முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. வேட்பாளருக்கு பாதுகாப்பு வழங்க ஜெயலலிதா கோரிக்கை

சனிக்கிழமை, 16 ஏப்ரல் 2011      அரசியல்
Image Unavailable

சென்னை, ஏப்.17 - அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்நாதனை கொலை செய்ய தி.மு.க. வேட்பாளரும், மணல் கொள்ளையருமான கே.சி. பழனிசாமியின் ஆட்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கென அமைக்கப்பட்ட கூலிப் படையினர் அரவக்குறிச்சி தொகுதிக்குள் நடமாடிக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வருவதையொட்டி,  வி. செந்தில்நாதனுக்கு போதிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிடுமாறு இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியுள்ளார் ஜெயலலிதா. 

இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

13.4.2011 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின் போது, தி.மு.க.வினரின் தில்லுமுல்லுகளையும், முறைகேடுகளையும், அராஜகங்களையும் சுட்டிக் காட்டிய அ.தி.மு.க.வினர் மீது தி.மு.க.வினர் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். 

தோல்வி பயம் காரணமாக தமிழகம் முழுவதும் தி.மு.க.வினர்,  அ.தி.மு.க.வினருக்கு எதிராகவும், தோழமைக் கட்சிகளைச் சார்ந்த தொண்டர்களுக்கு எதிராகவும் வன்முறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். தேர்தல் நாளன்று, மதுரை மாவட்டம், மேலூர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தி.மு.க.விற்கு எதிராக மக்கள் வாக்களிக்கின்றனர் என்பதை அறிந்த தி.மு.க.வினர், கழக உடன்பிறப்புகளையும், பொதுமக்களையும் பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கினர். இதில் அ.தி.மு.க. தொண்டர்கள் சேதுபதி மற்றும் தியாகராஜன் என்கிற தேவர் ஆகிய இருவரும் படுகாயமுற்று மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதேபோன்று, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பொன்மார் பகுதி கழக கிளைச் செயலாளர் பிரேம்நாத் வீட்டை தி.மு.க. ரவுடிக் கும்பல் அடித்து நொறுக்கியதுடன் அவரையும் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த பிரேம்நாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதேபோல், திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஆவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகி  முத்துராமலிங்கத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த  தி.மு.க. ரவுடிக் கும்பல் அவர் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கியுள்ளது. 

இதே தொகுதிக்குட்பட்ட வடிவேல்கரை கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர்  குபேந்திரன் என்பவரை பிரகாஷ் என்பவரின் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ரவுடிக் கும்பல் கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டது.  இதில் படுகாயமடைந்த குபேந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போன்று, கடலூர் மாவட்டம், அண்ணாகிராம ஒன்றியம், ஏழுமேடு பஞ்சாயத்து, முத்து கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த வீரப்பன், ஹேமச்சந்திரன், கருணாகரன் ஆகியோர் கழகத்திற்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்ததை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.வினர் கழக உடன்பிறப்புகள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  

இந்த கொலைவெறித் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இது போன்ற பல கொடூரச் சம்பவங்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்றன. தற்போதுள்ள காவல் துறை கருணாநிதி குடும்பத்தின் ஏவல் துறை என்பதை அனைவரும் அறிவர்.  உதாரணமாக, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த அன்பு என்பவரை ராஜ்குமார் என்பவரின் நண்பர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.  தாக்குதலுக்கு ஆளான அன்பு காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்று இருக்கிறார்.  ஆனால், காவல் துறை வழக்குப் பதிவு செய்ய மறுத்துவிட்டது.  இதனால் விரக்தியுடன் வெளியே வந்த அன்புவை, ராஜ்குமார் உள்ளிட்டோர் சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளனர்.  

தற்போது தமிழகக் காவல் துறையின் லட்சணம் இது தான்! தமிழக காவல் துறையின் கையாலாகாத்தனத்தை கருத்தில் கொண்டு, ஜனநாயகத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையில் வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க.வினரை இரும்புக் கரம் கொண்டு அடக்குமாறும், வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்யுமாறும் காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். தற்போது, கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கழக வேட்பாளர் வி.செந்தில்நாதனை கொலை செய்ய தி.மு.க. வேட்பாளரும், மணல் கொள்ளையருமான கே.சி. பழனிசாமியின் ஆட்கள் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்கென அமைக்கப்பட்ட கூலிப் படையினர் அரவக்குறிச்சி தொகுதிக்குள் நடமாடிக் கொண்டு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. தி.மு.க. வேட்பாளர் கே.சி. பழனிசாமி பண பலம், படை பலம், அதிகார பலம் மிக்கவர் என்பதால், கழக வேட்பாளர் வி. செந்தில்நாதனுக்கு போதிய பாதுகாப்பு வழங்க காவல் துறைக்கு உத்தரவிடுமாறும் இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago