இடதுசாரி வேட்பாளர்களுக்கு சோம்நாத் சாட்டர்ஜி பிரச்சாரம்...!

ஞாயிற்றுக்கிழமை, 17 ஏப்ரல் 2011      இந்தியா
Somnath-chatterjee

 

கொல்கத்தா,ஏப்.18 ​- இடதுசாரி வேட்பாளர்களுக்கு முன்னாள் பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தாராளமாக பிரச்சாரம் செய்யலாம் என்று இடது முன்னணி தலைவர் பீமன்போஸ் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் அடுத்த மாதம் 13 ம் தேதி வரை நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் இன்று ஆரம்பமாகிறது. இதையொட்டி அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இடது முன்னணி தலைவர் பீமன்போஸ் கொல்கத்தாவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

இ. கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டர்ஜி இடதுசாரி வேட்பாளர்களுக்கு பிரச்சாரம் செய்யலாம். இடது முன்னணிக்கு பிரச்சாரம் செய்ய யாராவது விருப்பப்பட்டால் அல்லது அப்படி ஒரு முடிவெடுத்தால் அதற்கு யாரும் தடையை ஏற்படுத்த மாட்டோம். அவர் தாராளமாக பிரச்சாரம் செய்யலாம். இவ்வாறு பீமன்போஸ் கூறினார். 

இம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக சோம்நாத் சாட்டர்ஜியை பலரும் நாடுவதாக தகவல்கள் கூறுகின்றன. கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக இ. கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து சில வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்டவர்தான் சோம்நாத் சாட்டர்ஜி. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சென்ற முறை பதவியில் இருந்த போது இவர் பாராளுமன்ற சபாநாயகராக இருந்தவர். அணுசக்தி ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு இடதுசாரிகள் காங்கிரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றனர். ஆனாலும் சோம்நாத் சாட்டர்ஜி சபாநாயகர் பதவியை விட்டு விலகாமல் இருந்தார். இந்த நிலையில் தான் அவர் இ. கம்யூனிஸ்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: