முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் பதட்டம்: ஜெட்லியுடன் பிரதமர் ஆலோசனை

செவ்வாய்க்கிழமை, 15 ஜனவரி 2013      அரசியல்
Image Unavailable

 

புது டெல்லி, ஜன. 16 - எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே தற்போது நிலவும் பதட்ட நிலை குறித்து லோக்சபை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ், ராஜ்யசபை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லி ஆகியோருடன் பிரதமர் மன்மோகன்சிங் அவசர ஆலோசனை நடத்தினார். 

கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் 2 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதிலும் ஒருவர் பாகிஸ்தான் படையினரால் தலை துண்டித்து கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனாலும் கூட இந்தியாவும், பாகிஸ்தானும் பேசி தீர்க்க வேண்டும் என்று சில வெளிநாடுகள் கருத்து தெரிவித்துள்ளன. ஆனால் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல்களால் எல்லையில் பதட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து நமது படைகள் அங்கே பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளன. எந்த சவால்களையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது என்று தலைமை தளபதி விக்ரம்சிங்கும் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்களை பா.ஜ.க. கடுமையாக கண்டித்துள்ளது. அக்கட்சித் தலைவர்களில் ஒருவரான சுஷ்மா சுவராஜ் கூறுகையில், இந்திய  ராணுவ வீரரின் துண்டிக்கப்பட்ட மற்றும் காணாமல் போன தலையை பாகிஸ்தானில் இருந்து கொண்டு வர முடியாவிட்டால் அந்த பக்கத்தில் இருந்து குறைந்தபட்சம் 10 தலைகளையாவது இங்கு கொண்டு வர வேண்டும் என்று ஆவேசமாக கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது. கோபத்தை வெளிப்படுத்துவது நியாயம்தான். ஆனால் அது போருக்கு வழிவகுத்து விடக் கூடாது என்று அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் மணீஷ்திவாரி டெல்லியில் கூறுகையில், எல்லை சம்பவத்தால் இந்த நாடே கொந்தளிப்பு அடைந்துள்ளது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனாலும் இதற்கு பதிலளிக்கும் போது பொறுப்புணர்வோடு பதிலளிக்க வேண்டும். மிகுந்த அமைதி காக்க வேண்டியது அவசியம். அரசில் சில குறைபாடுகள் இருப்பதாக சொல்கிறார்கள். அதை நான் மறுக்கிறேன். எதையும் சந்திக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது. நம்மிடம் எந்த குறையும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். 

இந்த நிலையில் சுஷ்மாசுவராஜையும், ராஜ்யசபை எதிர்க்கட்சித் தலைவர் அருண்ஜெட்லியையும் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து அவசர ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பு சுஷ்மாசுவராஜின் இல்லத்திலேயே நடைபெற்றது. அப்போது எல்லையில் நிலவும் பதட்டம் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்தினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்