முக்கிய செய்திகள்

தமிழக மேலவை தேர்தலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

செவ்வாய்க்கிழமை, 22 பெப்ரவரி 2011      இந்தியா
Supreme court of india

 

புது டெல்லி,பிப்.22 - தமிழக மேலவை தேர்தலுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

தமிழ்நாட்டில் நீண்ட காலத்துக்கு பிறகு மீண்டும் மேலவை அமைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. இதற்கு மத்திய அரசும் அனுமதி வழங்கியது. இதற்கான வாக்காளர் பட்டியலும் தயாரிக்கப்பட்டது. 

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த பாரதியார், திண்டிவனம் ராமமூர்த்தி, பாரதீய ஜனதா கட்சியின் வழக்கறிஞர் வானதி சீனிவாசன், புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, ம.தி.மு.க. செய்தி தொடர்பாளர் நன்மாறன், இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர், தஞ்சை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 11 பேர் சார்பில் மேலவை தேர்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களில் சட்ட மேலவை குறித்து பாராளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதல் இல்லாமல் ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது. ஆகவே இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். மேலவை தேர்தலையும் நடத்த தடை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தனர். மேலும் பஞ்சாயத்து தலைவர் போட்ட வழக்கிலும் தங்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருந்தார். இதையே மாநில அரசு இடைநிலை ஆசிரியர் சங்கத்தினரும் காரணம் காட்டி வழக்கு போட்டனர். இந்த வழக்குகள் அனைத்தையும் சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய முதல் டிவிசன் பெஞ்ச் விசாரித்து மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது. 

இந்த நிலையில் பாரதீய ஜனதா வழக்கறிஞர் வானதி சீனிவாசனும், திண்டிவனம் ராமமூர்த்தியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் பன்சால் மற்றும் கோகலே நேற்று விசாரித்தனர். .பின்னர் தமிழக சட்டசபை மேலவை தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். இந்த மனுக்களின் அடுத்த விசாரணை ஜூன் மாதம் நடக்கும் என்றும் அறிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: