தாராபுரம் கடலை வியாபாரி மருத்துவ மனையில் அனுமதி

திங்கட்கிழமை, 11 பெப்ரவரி 2013      வர்த்தகம்
Image Unavailable

 

தாராபுரம், பிப்.12 - ரூ.27 ஆயிரத்து 500 கோடி அமெரிக்க பத்திர விவகாரம் தொடர்பாக, தாராபுரம் கடலை வியாபாரி சென்னை வருமானவரித்துறை விசாரணைக்கு செல்லவில்லை. அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் உப்புத்துறை பாளையத்தைச் சேர்ந்த கடலை வியாபாரி ராமலிங்கம் இவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் ரூ.27 ஆயிரத்து 500 கோடி மதிப்பிலான அமெரிக்க பத்திரத்தை கைப்பற்றினார். ஒரு கடலை வியாபாரியிடம் இவ்வளவு பணம் எப்படி வந்தது என்று அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு சென்னைக்கு அழைத்தனர்.

கடந்த மாதம் 4ந்தேதி அவர் சென்னையில் வருமானவரித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆஜராகி தனது விளக்கத்தை தெரிவித்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் சிக்கிய அமெரிக்க பத்திரம் அனைத்தும் போலியானது என்று அமெரிக்க பார்க் கிளேஸ் வங்கியும், இந்திய நிதி அமைச்சகமும் அறிவித்தது. இதைத் தொடர்ந்து சுய விளம்பரம் தேடிக் கொண்டதாக ராமலிங்கம் மீது எந்த நேரத்திலும் வழக்கு தொடரப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.

எனவே இந்த வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க வியாபாரி ராமலிங்கம் சென்னை ஐகோர்ட்டு மூலம் முன் ஜாமீன் பெற்றார். சென்னை ஐகோர்ட்டு அவருக்கு 4 முறை முன்ஜாமீன் வழங்கியது. கடைசியாக வழங்கப்பட்ட முன் ஜாமீன் நேற்றுடன் (11ந் தேதி) முடிவடைந்தது. இந்த நிலையில் தான் விசாரணைக்காக சென்னை வருமாறு ராமலிங்கத்துக்கு வருமான வரி அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன் அடிப்படையில் நேற்று அவர் சென்னை சென்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது ராமலிங்கத்திடம் கேட்டபோது என்னால் இந்த வழக்கு விசாரணைக்கு எந்த பாதிப்பும் வராமல் இருக்க சென்னையில் நடைபெறும் விசாரணையில் இன்று (நேற்று) ஆஜராவேன். விசாரணைக்கு செல்லக்கூட என்னிடம் பணம் இல்லாவிட்டாலும கடன் வாங்கியாவது சென்று வருவேன் என்று கூறியிருந்தார். எனவே அவர் கண்டிப்பாக விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் வியாபாரி ராமலிங்கம் சென்னை சென்று ஆஜராகவில்லை என்பது தெரியவந்தது.

இது பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:

திடீரென்று எனக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக தாராபுரம் மருத்துவமனையில் சேர்ந்துள்ளேன். அங்கு எனக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதன் காரணமாக நான் சென்னை விசாரணைக்கு செல்ல இயலவில்லை என்று கூறினார்.

வியாபாரி ராமலிங்கத்துக்கு சென்னை ஐகோர்ட்டு வழங்கியிருந்த முன் ஜாமீன் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நேரத்தில் சென்னை சென்றால் தன் மீது அடுத்த கட்ட நடவடிக்கையில் வருமான வரித்துறையினர் ஈடுபடலாம் என்ற நோக்கத்தில் ராமலிங்கம் சென்னை செல்வதை தவிர்த்திருக்கலாம் என்றும் ஆஜராக முடியாததற்கான தகவலை தனது வக்கீல் மூலம் தெரிவித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. முன் ஜாமீனை மேலும் நீட்டிப்பு செய்து வாங்கிய பின்பு சென்னை சென்று விசாரணைக்கு அவர் ஆஜராவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: