முக்கிய செய்திகள்

சோனியா காந்திக்கு சுவாமி அக்னிவேஷ் எச்சரிக்கை

Swami Agnivesh

 

ராஞ்சி,ஏப்.22 - ஊழலை ஒழித்துக்கட்டுவதாக நீங்கள் உறுதிபூண்டிருக்கிறீர்கள். ஆனால் உங்களுடைய பேச்சுக்கு மாறாக உங்கள் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் பேசுகிறார். அவர் பேசுவதை நீங்கள் தடுத்து நிறுத்தாவிட்டால் உங்கள் கட்சியின் இமேஜ் பெரிதும் பாதிக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு சுவாமி அக்னிவேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் ராஞ்சியில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, 

ஊழலை ஒழிக்கும் விவகாரத்தில் அண்ணா ஹசாரேவின் கடிதத்திற்கு நீங்கள்(சோனியா) பதிலளித்து எழுதியிருக்கிறீர்கள். அதை நாங்கள் உண்மை என்று நம்புகிறோம். ஆனால் உங்கள் கட்சித் தலைவர்களில் ஒருவரான திக்விஜயசிங் உங்கள் பேச்சுக்கு நேர்மாறாக பேசுகிறார். கருத்துக்களை கூறுகிறார். எனவே அவர் மீது நீங்கள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சோனியா காந்தியை ஸ்வாமி அக்னிவேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். 

முன்னதாக சில தினங்களுக்கு முன் ஊழலை எதிர்த்து அண்ணா ஹசாரே போராட்டம் நடத்தினார். பின்னர் அவர் சோனியாவுக்கு கடிதமும் எழுதினார். அந்த கடிதத்தில் ஒரு அமைச்சர் மீது அண்ணா ஹசாரே புகார் கூறி எழுதியிருப்பதாக கூறப்படுகிறது. தனது இயக்கத்தை தாக்கி பேசி வருவதாக திக்விஜயசிங் மீதும் அண்ணா ஹசாரே புகார் கூறியிருப்பதாக தெரிகிறது. இதற்கு பதிலளித்து சோனியா கடிதம் எழுதியுள்ளார். அதில் ஊழலை ஒழிக்க தாம் உறுதிபூண்டிருப்பதாக சோனியா குறிப்பிட்டுள்ளார். ஆனால் திக்விஜயசிங் அதற்கு நேர்மாறாக பேசுவதாகவும், அவரது பேச்சை தடுத்து நிறுத்தும்படியும் ஸ்வாமி அக்னிவேஷ் சோனியாவை கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: