வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய தி.மு.க. - காங்கிரஸ் திட்டம்- சுப்பிரமணிய சுவாமி

subramanian-swamy 2

 

கோவை,ஏப்.- 23 - மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய தி.மு.க.வும், காங்கிரசும் திட்டமிட்டிருப்பதாக ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் அவர் மேலும் கூறியதாவது,  மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்தால் ரசீது வருவதை போன்று மின்னணு எந்திரத்திலும் ஓட்டு போட்டவுடன் ரசீது வர வேண்டும். இல்லையெனில் வாக்குப் பதிவை நம்ப முடியாது. இதற்காக டெல்லி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்துள்ளேன். 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலர் ஜப்பானில் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஜப்பான் இந்த மின்னணு எந்திரங்களை பயன்படுத்துவதில்லை. காரணம் கேட்டால் இந்த எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்புகள் இருப்பதாக கூறுகின்றனர். தமிழக சட்டப் பேரவை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு எந்திரங்களில் முறைகேடு செய்ய தி.மு.க.வும், காங்கிரசும் திட்டமிட்டுள்ளன. இதற்காக வெளிநாடுகளில் இருந்து ஒரு குழு சென்னைக்கு வந்துள்ளது. 

2 ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கை இன்னும் ஓரிரு நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த வழக்கு விசாரணை, குறுக்கு விசாரணைகளில் அரசு வழக்கறிஞருக்கான அதிகாரத்தை போன்று எனக்கும் தருமாறு கேட்டுள்ளேன். இவ்வழக்கில் எனது ஈடுபாடு தொடர்ந்து இருக்கும். நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. இவ்வழக்கில் சில ஆவணங்கள் காணாமல் போய் விட்டதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆனால் தற்போது சி.பி.ஐ. வசம் உள்ள ஆவணங்கள் போதுமானதாக இருக்கிறது. வழக்கு விசாரணையில் சி.பி.ஐ. யின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது. ஊழலுக்கு ஆதரவாக தானும் போராடுவதாக சமூக சேவகர் ஹசாரேவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ