இலங்கைக்கு எதிரான தீர்மானம்: இன்று வாக்கெடுப்பு

புதன்கிழமை, 20 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

ஜெனிவா, மார்ச். 21​ - ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கை தொடர்பான இறுதி தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது. ஆனால் அதில் போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவை என்று கோரப்படவில்லை. சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரில் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இலங்கைக்கு எதிரான இறுதி தீர்மானத்தை அமெரிக்கா தாக்கல் செய்தது. அதில் போர் படிப்பினைகள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கையில் உள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகளை அமல்படுத்துமாறும் அனைத்து இலங்கை பிரஜைகளுக்கும் சம நீதி, உரிமை ஆகியவற்றை உறுதிப்படுத்த தனது சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறும் இலங்கை அரசை இத்தீர்மானம் வலியுறுத்துகிறது. ஐ.நா. மனித உரிமை ஆணைய அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்று இலங்கை அரசை கேட்டுக் கொள்கிறது. தீவிரவாதத்தை ஒடுக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதாக இருப்பதை நாடுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் உள்ளாட்சி கவுன்சில் தேர்தல் நடத்தப்படும் என்ற அந்நாட்டு அரசின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தீர்மானத்தில் இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீக்கப்பட்டுள்ளது. இதே போல் சிறப்பு பிரதிநிதிகள் தங்குதடையின்றி இலங்கைக்கு சென்று வர அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கைவிடப்பட்டுள்ளது. இவை இரண்டும் வரைவு தீர்மானத்தில் இருந்த கோரிக்கைகளாகும். இப்போது இறுதி தீர்மானத்தில் இவை நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மாறாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ராஜபக்சே அரசு எட்டியுள்ள முன்னேற்றம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை தேவையில்லை என்ற முடிவை இந்தியாவின் தீவிர முயற்சி காரணமாக அமெரிக்கா எடுத்துள்ளது. இறுதி தீர்மானத்தில் செய்யப்பட்டுள்ள இரண்டு மாற்றங்களும், நாடுகளின் இறையாண்மை தொடர்பான இந்தியாவின் கருத்தையொட்டி அமைந்துள்ளன. இறுதி தீர்மானத்தில் இனப்படுகொலை என்ற வார்த்தையும் இடம் பெறவில்லை. இதனிடையே இறுதி தீர்மானம் தொடர்பாக ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திலீப் சின்ஹா மூத்த அதிகாரிகளுடன் ஆலோசிக்கவுள்ளார். இந்த தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: