இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் நிறைவேறியது

வியாழக்கிழமை, 21 மார்ச் 2013      உலகம்
Image Unavailable

 

ஜெனிவா, மார்ச். 22 - இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்த நீர்த்துப் போன தீர்மானம் நேற்று வாக்கெடுப்பின் போது நிறைவேறியது. இந்த தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 25 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன. பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தது. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் இந்த தீர்மானம் மனித உரிமை கவுன்சிலில் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இலங்கைக்கு எதிராக கடுமையான வாசகங்கள் எதுவுமே இல்லை. 

இலங்கையில் கடந்த 2009 ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையே கடும் போர் நடைபெற்றது. இந்தப் போரில் விடுதலைப் புலிகள் மட்டுமின்றி லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்களும் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். சமீபத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் 12 வயது பாலகன் பாலச்சந்திரன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவலும் வெளியானது. இந்த அக்கிரமங்களை எல்லாம் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட போது உலக தமிழர்கள் கொதித்துப் போனார்கள். ராஜபக்சே மனிதனா? அல்லது கொலைகாரனா என்று எல்லோரும் கேள்வி எழுப்பினார்கள். அவரை போர்க்குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை உலகளவில் எழுந்தது. 

இந்த நிலையில் இலங்கை இனப் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே ஐ.நா. சபையில் அமெரிக்கா ஒரு கண்டன தீர்மானத்தை சென்ற ஆண்டு கொண்டு வந்தது. ஆனால் அந்த தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ளபடி எதையும் இலங்கை அரசு செயல்படுத்தவே இல்லை. இதையடுத்து இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மீண்டும் ஒரு தீர்மானத்தை சமீபத்தில் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் இந்த தீர்மானத்தில் கடுமையான வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணை தேவை போன்ற வாசகங்கள் ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்தன. 

ஆனால் நாளடைவில் அந்த கடுமையான வாசகங்கள் படிப்படியாக நீக்கப்பட்டன. அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் அளவுக்கு இந்திய அரசு சில காரியங்களில் ஈடுபட்டதாக தகவல்கள் கூறுகின்றன. எனவே அமெரிக்க தீர்மானத்தை கடுமையாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் அனைத்து தலைவர்களும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அவை அத்தனையும் செவிடன் காதில் ஊதிய சங்கு போல் ஆகி விட்டது. மத்திய அரசு இந்த தீர்மானத்தை கடுமையாக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா உட்பட 25 நாடுகள் கலந்து கொண்டு நீர்த்துப் போன அந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தது. 8 நாடுகள் வாக்கெடுப்பை புறக்கணித்த நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒரு பலனும் இல்லை. காரணம், அதில் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற வாசகம் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: