இங்கிலாந்தில் ஆந்திர பெண் கற்பழிக்கப்பட்ட துயர சம்பவம்

திங்கட்கிழமை, 22 ஏப்ரல் 2013      இந்தியா
Image Unavailable

 

லண்டன், ஏப். 23 - இங்கிலாந்தில் ஐதராபாத்தைச் சேர்ந்த 40 வயது படிப்பறிவில்லாத பெண் ஒருவர் கற்பழிக்கப்பட்டு, பல ஆண்டுகளாக 3 நடுத்தர குடும்பத்தாரால் அடிமைபடுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆந்திர மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் கடந்த 2005 ம் ஆண்டு இங்கிலாந்துக்கு வேலைக்கு சென்றுள்ளார். அவர் இங்கிலாந்தில் அடித்து துன்பப்படுத்தப்பட்டு, கற்பழிக்கப்பட்டு, காலாவதியான உணவை வலுக்கட்டாயமாக உண்ண வைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக 3 நடுத்தர குடும்பத்தால் அடிமையாக நடத்தப்பட்டுள்ளார். படிப்பறிவில்லாத அவர் இடையில் எப்படியோ தப்பித்து ஹெர்ட்போர்ட்ஷையர் போலீசார், அறக்கட்டளைகளை அணுகி உதவி கேட்டுள்ளார். ஆனால் போலீசார் அப்பெண்ணிடம் பேசுகையில் அவரது எஜமானன் அந்த பெண்ணுக்கு மொழிபெயர்த்துள்ளார். 

இதையடுத்து அந்த பெண் மீண்டும் அடிமையானார். தங்கள் குடும்பப் பெயரைக் கெடுக்க முயன்றால் கொன்று வீட்டுக்கு பின்புறம் இருக்கும் தோட்டத்தில் புதைத்துவிடுவோம் என்று அந்த பணக்கார எஜமானர் அடித்து மிரட்டியுள்ளார். இதையடுத்து 3 குடும்பங்கள் அப்பெண்ணை 3 ஆண்டுகளுக்கும் மேலாக அடிமையாக வைத்துள்ளனர். அவர்கள் அப்பெண்ணின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு சம்பளமே கொடுக்காமல் வேலை வாங்கியுள்ளனர். இறுதியாக புலம்பெயர் பணியாளர்களுக்கான அறக்கட்டளை மற்றும் லிபர்ட்டி என்ற மனித உரிமை அமைப்பு தான் அவருக்கு உதவியுள்ளது. முன்னதாக அவர் 12 முறை தப்பித்து புகார் கொடுத்தும் புன்னியமில்லாமல் போனது. 

கடந்த 2006ம் ஆண்டு அப்பெண்ணின் எஜமானி ஷமினா யூசுப்(33) கப்பை தூக்கி அவர் மீது எறிந்ததில் அவரது காலில் ஆழமான வெட்டு விழுந்தது. இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் எஜமானி மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பிறகு 2 ஆண்டுகள் கழித்து அப்பெண் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்தார். ஆனால் அவரை பிடித்து வந்து அந்த எஜமானர் தனது உறவினர் வீட்டில் வேலைக்கு வைத்தார். புனித ஜான்ஸ் உட்டில் அப்பெண் தங்கி இருந்தபோது அவரை கசாப்புக்காரரான என்கார்டா(53) என்பவர் பலமுறை கற்பழித்துள்ளார். பின்னர் அப்பெண் தனக்கு தெரிந்த சசி ஓப்ராய் மற்றும் அவரது கணவர் பல்ராம் வாழ்ந்த மிடில்செக்ஸ் வீட்டுக்கு சென்றார். அவர்கள் அவரை வாரத்தில் 7 நாட்கள், தினமும் 17 மணிநேரம் சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்று 8 பேர் கொண்ட குடும்பத்தாருக்கு வேலை பார்க்க வைத்தனர். அப்பெண் வீட்டை விட்டு ஓட்டம் பிடித்த பிறகு இதை ஸ்காட்லாந்து யார்டு விசாரித்தது. இதையடுத்து அவரை கொடுமைப்படுத்திய மிடில்செக்ஸை சேர்ந்த ஓப்ராய்(54), வடக்கு லண்டனைச் சேர்ந்த யூசுப்(33) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் என்கார்டா மீது கற்பழிப்பு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இத்தனை ஆண்டுகளாக பட்ட சித்ரவதையில் அப்பெண் நடக்க முடியாமல் வீல் சேரில் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: