முக்கிய செய்திகள்

இலங்கை படுகொலை குறித்து மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கை

Navi-Pillay

 

ஐ.நா., ஏப்.28 - இலங்கையில் இறுதிக்கட்ட போரின்போது நடந்த இனப் படுகொலைகள் குறித்து மீண்டும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா.சபையின் மனித உரிமை கவுன்சிலின் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை ராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த உள்நாட்டு போரில் இறுதிக்கட்ட சண்டையில் ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 40 ஆயிரம் அப்பாவி தமிழர்கள் இவ்விதம் கொல்லப்பட்டதாக ஐ.நா. குழு கூறியுள்ளது. ஆனால் ஒரு லட்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த ஐ.நா. சபை சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஆனால் இந்த குழுவை இலங்கையில் அனுமதிக்க அதிபர் மஹிந்தா ராஜபக்ஷே மறுத்துவிட்டார். இதையடுத்து இந்த இனப்படுகொலையில் போர்க் குற்றங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து 3 நபர் ஐ.நா. குழு ஒன்று ஆய்வு செய்தது. தங்களுக்கு கிடைத்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கைக்கு வெளியேயே இந்த ஆய்வை இக்குழு மேற்கொண்டது. அதன்படி இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது போர்க் குற்றத்தின்கீழ் வரும் என்றும் அந்த குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. எனவே அதிபர் ராஜபக்ஷே மீது போர்க்குற்றம் சுமத்த வேண்டும் என்று உலகத் தமிழர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். 

இந்த போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிடப்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். இந்த நிலையில் இலங்கை இனப் படுகொலை குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழுவின் தலைவர் நவி பில்லாய் கோரிக்கை விடுத்துள்ளார். ஐ.நா. சபையின் மூவர் குழு அளித்துள்ள அறிக்கை அதிர்ச்சி அடைய வைக்கிறது. அதில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. எனவே இலங்கை இனப் படுகொலை குறித்து மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். உள்நாட்டு மற்றும் சர்வதேச சட்டத்தின் படி இந்த இனப் படுகொலை குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தப்பட வேண்டியது ஒரு கடமையாகும் என்றும் அவர் தெரிவித்தார். 

ஐ.நா. குழு விசாரணைக்கு இலங்கை அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறது. இதை அந்த அரசு மாற்றிக்கொண்டு ஐ.நா. குழு இலங்கையில் விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் நவி பில்லாய் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: