இஸ்லாமாபாத், ஏப். 27 - பெனாசிர் பூட்டோ கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிபதிகளை கைது செய்த வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2007 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 ம் தேதி ராவல்பிண்டியில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ வெடிகுண்டு வைத்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடந்த போது முஷாரப் தான் பாகிஸ்தான் அதிபராக இருந்தார். இந்த கொலை வழக்கில் முஷாரப்பை கைது செய்யுமாறு தீவிரவாத தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து வீட்டுக் காவலில் இருக்கும் முஷாரப் பெனாசிர் கொலை வழக்கில் நேற்று முன்தினம் முறைப்படி கைது செய்யப்பட்டார். அவர் நேற்று ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார். இத்தனை காலம் வெளிநாட்டில் இருந்த முஷாரப் பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடுவதற்காக நாடு திரும்பினார். ஆனால் அவரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.