முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் நர்ஸ் மீது ஆசிட் வீச்சு

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

மும்பை, மே. 4 - டெல்லியை சேர்ந்த பிரீத்தி ரதி(23) மும்பையில் உள்ள மருத்துவமனையில் பணிபுரிய வந்த போது ரயில் நிலையத்தில் அவர் மீது ஆசிட் வீசப்பட்டதில் அவரது வலது கண்ணில் பார்வை பறிபோனது. டெல்லியைச் சேர்ந்தவர் பிரீத்தி ரதி(23). நர்ஸ். அவர் மும்பை கொலாபாவில் உள்ள கடற்படை மருத்துவமனையான ஐஎன்ஹெச்எஸ் அஸ்வினியில் பணிபுரிய மும்பை பந்தரா ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் காலை 7.55 மணிக்கு வந்திறங்கிய போது அவர் மீது ஒரு மர்ம நபர் ஆசிடை வீசிவிட்டு தப்பியோடி விட்டார். இந்த தாக்குதலில் ரதி படுகாயம் அடைந்தார். உடனே மசினா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவரது உடலில் 20 சதவீதம் தான் காயம் ஏற்பட்டுள்ளது என்றாலும் அவை மோசமானது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இன்னும் 4-5 நாட்களுக்கு அவரது நிலைமை சற்று மோசமாகத் தான் இருக்கும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ள அவருக்கு நரம்பு வழியாகத் தான் உணவு கொடுக்கப்படுகிறது. இந்த ஆசிட் வீச்சில் அவரது வலக் கண்ணில் பார்வை பறிபோனது. ஆசிடை விழுங்கியதால் அவரது வாய் புண்ணாக உள்ளது. அவரது சுவாசக் குழாய் மற்றும் உணவுக் குழாயும் சேதம் அடைந்துள்ளது. இதனால் அவர் மூச்சுவிட வசதியாக அவரது மூச்சுக் குழாயில் ஓட்டை போடப்பட்டுள்ளது. 

இது குறித்து சம்பவம் நடந்தபோது அவருடன் இருந்த அவரது தாய் மாமா வினோத் குமார் தாஹியா கூறுகையில், ஐ.சி.யு வார்டில் கூட நான் பணியில் சேர வேண்டுமே என்று ரதி வருத்தப்பட்டார். அவரால் பேச முடியவில்லை. தன் மீது ஆசிட் வீசயவனை பிடித்துவிட்டார்களா என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து 8 பக்கம் எழுதிக் காட்டினார். ஆசிட் வீச்சு நடந்தவுடன் ரதியை மருத்துவமனையில் சேர்க்காமல் ரயில்வே போலீசார் பேப்பர் வேலையை பார்த்தனர். அப்போது பந்த்ராவைச் சேர்ந்த சபீர் கான்(42) என்பவர் தான் எங்களை தனது காரில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அவர் மட்டும் உதவவில்லை என்றால் ரதியை உயிருடன் பார்த்திருக்க முடியாது. 

எங்கள் ரயில் சூரத்தில் சென்று கொண்டிருந்தபோது அதிகாலை 4.30 மணிக்கு நான் விழித்தேன். அப்போது கழிவறை அருகே ஒருவர் கையில் ஒரு லிட்டர் கேனுடன் நின்றார் என்றார். ஆசிட் வீசயவன் மும்பையில் இல்லை: ரதி மீது ஆசிட் வீசயவன் மும்பையில் இருந்து வெளியேறிவிட்டான் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். அவன் ஆசிடை வீசி விட்டு அச்சமயம் புறப்பட்டுக் கொண்டிருந்த ஜம்மு தாவி எக்ஸ்பிரஸில் ஏறி இருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. இதனால் ரயில்வே போலீசார் போரிவிலி மற்றும் ஜம்மு ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர். தாஹியா கூறிய அடையாளங்களின்படி குற்றவாளியின் படம் வரையப்பட்டு அது வெளியிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்