ஜம்மு சிறையில் பாக். கைதி மீது தாக்குதல்

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      இந்தியா
Image Unavailable

 

ஸ்ரீநகர், மே. 4 - ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோட் பால்வல் சிறையில் பாகிஸ்தான் சிறைக் கைதி ஷானுல்லா என்பவர் இந்திய கைதி ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் இந்தியரான சரப்ஜித்சிங் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் நேற்று முன்தினம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் கோட் பால்வல் சிறையில் ஷானுல்லா என்ற பாகிஸ்தான் கைதி மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஷானுல்லா ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

ஷானுல்லா மீது தாக்குதல் நடத்தியவர் பெயர் வினோத் குமார் என்றும் அவர் முன்னாள் ராணுவ அதிகாரி என்றும் தெரியவந்துள்ளது. உத்தர்காண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வினோத் குமார் ஆயுள் தண்டனைக் கைதியாக கோட் பால்வல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். வினோத் குமார் கூரிய ஆயுதங்களால் ஷானுல்லாவை தாக்கியிருக்கிறார். சரப்ஜித்சிங் படுகொலைக்கு பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. 

இருப்பினும் கோட் பால்வல் சிறையின் கண்காணிப்பாளர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். கடந்த 1999 ம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் உட்பட ஐந்து வழக்குகளில் ஷானுல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மீனவர்களைத் தவிர்த்து மொத்தம் 220 பாகிஸ்தானியர் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்: