கச்சத்தீவு காவு: கருணாநிதி மீது முதல்வர் குற்றசாட்டு

வெள்ளிக்கிழமை, 3 மே 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மே.4 - கச்சத்தீவு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை இந்தியா தனது ஆளுகைக்கு கீழ் கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானத்தை சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது அடுக்கடுக்காக குற்றஞ்சுமத்தினார். இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்ட கச்சத்தீவு மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை இந்தியா தனது ஆளுகையில் கீழ் கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என முதலமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் நேற்று தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியா - இலங்கை நாடுகளுக்கிடையே 1974 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இறுதியில் ஏற்பட்டது.  இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் சார்பில் அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் 26.6.1974 அன்றும், இலங்கையின் சார்பில் அன்றைய இலங்கை அதிபர் சிரிமாவோ பண்டாரநாயகே  28.6.1974 அன்றும் கையொப்பமிட்டனர்.  

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, நாடாளுமன்ற மாநிலங்கள் அவையில் பேசிய அப்போதைய வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்வரண் சிங் , இது குறித்து அப்போதைய தமிழக முதலமைச்சர் மு. கருணாநிதியிடம் விரிவாக குறைந்த பட்சம் இரண்டு முறை கலந்துரையாடப்பட்டது என்று தெரிவித்து இருக்கிறார். கையெழுத்தாவதற்கு முன்பே அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு கச்சத் தீவு மற்றும் அதைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளை இந்தியா, இலங்கை நாட்டிற்கு தாரை வார்க்கப் போகிறது என்பது நன்கு தெரியும் என்ற உண்மை தெளிவாகிறது.  

இது போன்ற கருத்துரு மத்திய அரசிடம் இருப்பதை அறிந்த உடனேயே தமிழக மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி, மாநிலம் தழுவிய போராட்டத்தை  கருணாநிதி நடத்தியிருக்கலாம்.   போராட்டம் என்று நடத்தவில்லை என்றாலும், 1960-க்கு முன்பு மேற்கு வங்க மாநிலம் பெருபாரி பகுதியை கிழக்கு பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அளிக்க முயன்ற போது, அதற்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை சுட்டிக் காட்டி உச்ச நீதிமன்றத்திலே சட்ட ரீதியாக மனுத் தாக்கல் செய்திருக்கலாம். ஆனால், அவ்வாறு செய்ய கருணாநிதி விரும்பவில்லை. எனவே தான், 29.6.1974 அன்று செய்தியாளர்கள் அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் ``கச்சத் தீவை இந்திரா காந்தி இலங்கைக்கு கொடுத்தது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக ஜன சங்கத் தலைவர் வாஜ்பாய் அறிவித்துள்ளாரே, உங்கள் கருத்து என்ன?'' என்று கேட்டதற்கு,``அது பற்றி நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை'' என்று பதில் கூறியுள்ளார்  கருணாநிதி.   கச்சத் தீவு காவு கொடுக்கப்பட்டதை தடுக்க எதையுமே செய்யாமல் மவுனம் சாதித்துவிட்டு,  கச்சத் தீவு தாரைவார்க்கப்பட்ட பிறகு, பெயரளவிலே தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி கச்சத் தீவு பிரச்சனைக்கு மூடு விழா நடத்தினார்  மு. கருணாநிதி.

அந்தத் தீர்மானத்தின் மீது பேசிய  கருணாநிதி, ``ஜூன் மாதம் 27 ஆம் தேதி திடீரென்று அறிவிப்பு வந்தது. இப்போதும் சொல்கிறேன். இது பற்றி எந்த விதமான சூசகமான தகவலையும் இந்த அரசுக்கு அறிவிக்கவில்லை. 27-ஆம் தேதி பத்திரிகையில் பார்த்தவுடன் பதறிப்போய் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் தந்தி கொடுத்தேன். ..'' என்று கூறியிருக்கிறார். 

ஆனால், கருணாநிதியின் தலைமையில் ``டெசோ'' அமைப்பின் சார்பில் 15.4.2013 அன்று நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் கச்சத் தீவு குறித்த தீர்மானத்தில், ``1974 ஆம் ஆண்டு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்ட போது, கழக அரசு முதல் நிலையிலேயே அதனைக் கடுமையாக எதிர்த்தது. அதையும் மீறி ஒப்பந்தம் கையெழுத்தான போது,  குறைந்த பட்சம் தமிழக மீனவர்களுக்கு கச்சத் தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையும், மீனவர்களின் வலைகளை அங்கே உலர்த்திக் கொள்வதற்கான உரிமையும் அந்த ஒப்பந்தத்தின் பிரிவுகளில் சேர்க்கப்பட வேண்டுமென்று கழக அரசு வலியுறுத்தி அந்த ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன. ..'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதில் எது உண்மை என்பதை  கருணாநிதி தான் நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும்.  1974-ல் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேசிய கருணாநிதி கச்சத் தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்ட செய்தியை, பத்திரிகைகளில் பார்த்துத்தான் தெரிந்து கொண்டேன்;  பதறிப் போனேன்ா  என்கிறார். ஆனால் 2013-ல், கடந்த மாதம் நடைபெற்ற டெசோ கூட்டத்தில், ஒப்பந்தம் நிறைவேற்றப் படுவதற்கு முன்பே, இவர் சொல்லித்தான் சில ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டன என்கிறார்! இது என்ன பித்தலாட்டம்? 

 எப்படியிருந்தாலும், கச்சத் தீவு பிரச்சனையில்  கருணாநிதியின் செயலற்ற தன்மை காரணமாக,  இரட்டை நிலை காரணமாக, தனக்கே இயல்பான கபட வேடம் காரணமாக, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. 

நான் முதன் முறையாக 1991-ல் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் கலந்து கொண்டு, கச்சத் தீவை மீட்போம்ா என்று அறிவித்தேன். கச்சத் தீவு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை திரும்பப் பெற வேண்டும் என்பது தொடர்பான தீர்மானம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 3.10.1991 அன்று எனது அரசால் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கச்சத் தீவை மீளப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பாரதப் பிரதமரை நேரில் பல முறை வற்புறுத்தி கூறினேன். கடிதம் மூலமும் வற்புறுத்தி இருக்கிறேன். 

``ஜெயலலிதா,  கச்சத் தீவை மீட்டே தீருவேன் என்றாரே? ஏன் இன்னும் மீட்கவில்லை? அதை மீட்காமல் எதை மீட்டிக் கொண்டிருக்கிறார்?ா என்று என்னை அடிக்கடி கேலி செய்து வந்துள்ளார்  கருணாநிதி. பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் 2001 வரை மாநிலத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருந்தார்  கருணாநிதி. நடுவில் ஓர் ஆண்டைத் தவிர, 1996 முதல் ஒரு மாதத்திற்கு முன்பு வரை, வெவ்வேறு மத்திய அரசுகளை தாங்கிப் பிடித்துக் கொண்டு இருந்தார் திரு. கருணாநிதி. ஆனால் கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.  மத்திய ஆட்சியில் பங்கு கொண்ட அத்தனை ஆண்டுகள், 16 ஆண்டுகளில்,  கருணாநிதி எதை மீட்டிக் கொண்டிருந்தார்? என்று அவர் தான் கூற வேண்டும்.   

நான் இரண்டாவது முறையாக முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, ாடுநயளந  ேயீநசயீநவரவைலா-அதாவது, நிரந்தரமான குத்தகை என்ற முறையிலாவது, கச்சத் தீவில் மீன் பிடிக்கும் உரிமையை இந்திய மீனவர்களுக்கு மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும் என்று பாரதப் பிரதமரை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன். கடிதங்கள் வாயிலாகவும் கேட்டுக் கொண்டேன்.  கருணாநிதியின் தயவில் மத்திய அரசு இருந்ததாலோ என்னவோ, எந்த விதமான நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவில்லை.  

2006-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து தமிழகத்தின் முதலமைச்சராக  மு. கருணாநிதி பொறுப்பேற்றுக் கொண்டார். மத்தியில், தி.மு.க. ஆதரவுடன் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்றது. எந்த மத்திய அரசும், மாநில தி.மு.க. அரசும், 1974-ஆம் ஆண்டு கச்சத் தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தனவோ, அதே அரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சிப் பொறுப்பை வகித்தன. ஆனால், கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.  மாறாக, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன. மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இருந்த வரை கச்சத் தீவை மீட்பதற்காக சுண்டு விரலைக் கூட அசைக்காத  கருணாநிதி, பல்வேறு காரணங்களுக்காக புதுப்பிக்கப்பட்ட டெசோ அமைப்பு மூலம் ா1974 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் மூலம் கச்சத் தீவை விட்டுக் கொடுத்தது அரசியல் சட்ட ரீதியாக செல்லுபடியாகாது என்றும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், கச்சத் தீவு இந்தியாவின் ஒரு பகுதி தான் என்பதை பிரகடனப்படுத்த டெசோ அமைப்பின் மூலம் உச்ச நீதிமன்றத்தை அணுகுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் ஒரு தீர்மானத்தினை 15.4.2013 அன்று நிறைவேற்றி இருக்கிறார். 

கச்சத் தீவு மீட்கப்பட வேண்டும்; தமிழக மீனவர்களின் நலன் காக்கப்பட வேண்டும் என்ற அக்கறை   கருணாநிதிக்கு உண்மையாகவே இருந்திருந்தால், இந்த ஒப்பந்தம் செல்லத்தக்கதல்ல என மத்திய அரசுக்கு எதிராக நான் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போதே தமிழ்நாடு  அரசையும் அதில் இணைத்துக் கொண்டு கச்சத் தீவை மீட்பதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.  இல்லையெனில், என்னுடைய கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாகவாவது மாநில அரசின் சார்பில் எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்திருக்க வேண்டும். 

ஆனால் இப்படி எதையுமே செய்யாமல்,  மத்திய அரசு எந்தவித எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்கிறது என்று பார்த்துவிட்டு பின்னர் மாநில அரசு எதிர் உறுதி ஆவணத்தை தாக்கல் செய்து கொள்ளலாம் என்ற மழுப்பலான முடிவை எடுத்தார் அப்போதைய தமிழக முதல்வர், கருணாநிதி. குறைந்த பட்சம், தான் தாங்கிப் பிடித்திருந்த மத்திய அரசை வலியுறுத்தி தமிழக மீனவர்களுக்கு சாதகமான வகையில் மனுத் தாக்கல் செய்ய சொல்லி இருக்கலாம்.  ஆனால், அவ்வாறு எதையும்  கருணாநிதி செய்யவில்லை. இந்த வழக்கில் தமிழக அரசின் வருவாய்த் துறை இணைத்துக் கொள்ளப்பட்ட பின்னராவது மத்திய அரசை  கருணாநிதி வற்புறுத்தி இருக்கலாம். அல்லது இந்த வழக்கில் தி.மு.க.வை அப்போதே இணைத்துக் கொண்டிருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், இப்போது 'டெசோ' மூலம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாக அறிவித்து இருப்பது யாரை ஏமாற்ற என்பது தெரியவில்லை.கச்சத் தீவு பிரச்சனையில்  கருணாநிதி எவ்வாறு நடந்து கொண்டார் என்பதை இந்த நாட்டு மக்கள் அறிய வேண்டும், இந்த மாமன்ற உறுப்பினர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் இவற்றை எல்லாம் நான் இங்கே வேதனையுடன் குறிப்பிடுகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

Trisha & Vishaal pair up for new film | Cine Gossips

Johnny Movie Review | Top Star Prashanth | Sanchita Shetty | Vetriselvan | Thiagarajan

Thuppakki Munai Review | Vikram Prabhu | Hansika | Movie Review | Thinaboomi

ஆன்மிகம் என்றால் என்ன | Aanmeegem | Brahma Kumaris Tamil | Arivom AanmeegamTamil

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்: