பாக். தூதரக அதிகாரியுடன் கைகலப்பு: 2 பேர் கைது

புதன்கிழமை, 5 ஜூன் 2013      உலகம்
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன். 6 - சிறு வாகன விபத்து காரணமாக பாகிஸ்தான் தூதரக அதிகாரியுடன் கைகலப்பில் ஈடுபட்டதாக மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் உட்பட 2 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் முதன்மை செயலராக பணியாற்றுபவர் சர்கம் ரஸா. இவர் அலுவலகத்தில் இருந்து காரில் வசந்த் கஞ்ச் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகம் அருகே உள்ள சராய் பகுதியில் கார் வந்த போது அவ்வழியே சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரும், அவரது பின்னால் அமர்ந்திருந்த பெண்ணும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையடுத்து கார் ஓட்டுனருக்கும், மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது கார் ஓட்டுனரும், தூதரக அதிகாரியும் தாக்கப்பட்டதாகவும் அதில் இவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதால் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் தூதரக அதிகாரியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

இதனிடையே டெல்லியில் தங்கள் நாட்டு தூதர் தாக்கப்பட்ட சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துணை தூதர் கோபால் பாக்னேளுக்கு பாகிஸ்தாந் அரசு சம்மன் அனுப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் உரிய புலனாய்வு நடத்துமாறும் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறும் அவர்களிடம் வலியுறுத்தப்பட்டதாக பாகிஸ்தான் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதை ஷேர் செய்திடுங்கள்: