முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குன்றத்து கோயில் வாசலில் அதிநவீன கண்காணிப்பு கேமிரா

திங்கட்கிழமை, 8 ஜூலை 2013      ஆன்மிகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஜூலை. 9 - குற்றங்களை தடுக்கும் வகையில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் ரூ. 3 லட்சம் செலவில் அதிநவீன சுழலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படையான இந்த திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் திருவிழா மற்றும் பவுர்ணமி கிரிவல நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசிக்கின்றனர். எனவே கூட்ட நெரிசலைபயன்படுத்தி சமூக விரோதிகள் பக்தர்களிடம் பணம், நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இது போன்ற குற்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் சமூக விரோதிகள் கோயிலுக்குள் வருவதை கண்காணிக்கவும் காவல் துறை அறிவுறுத்தலின் பேரில் கோயில் நிர்வாகம் கண்காணிப்பு கேமிராவை பொருத்த முடிவு செய்தது. 

அதனடிப்படையில் கோயில் பொது நிதியில் இருந்து சுமார் 3 லட்சம் செலவில் அதிநவீன சுழற்கேமிரா கோயில் வாசல்களில் பொருத்தப்பட்டது. இந்த கேமிரா மூலம் சந்நிதி தெரு, 16 கால் மண்டபம், பெரிய ரத வீதி மற்றும் கோயில் அலுவலகம் என சுமார் 200 மீட்டர் தூரம் வரை சாலையில் நடைபெறும் அனைத்து சம்பவங்களையும் கணினியில் பதிவு செய்யப்படும். இதில் பதியும் காட்சிகளை கோயில் வாசல் முன்புள்ள காவல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கோயில் அலுவலகத்தில் இருந்தும் திரையில் நேரடியாக கண்காணிக்கலாம். மேலும் இரவு நேரத்தில் காட்சிகளை ஒளிரும் தன்மையில் பதிவு செய்யும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குற்ற செயல்களை தடுக்கலாம் என்று கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. ஏற்கனவே கோயிலுக்குள் பல்வேறு இடங்களில் கேமிரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony