லஞ்சப் பணத்தில் மனைவிக்கு நகை வாங்கிய அதிகாரி

வெள்ளிக்கிழமை, 12 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

பாட்னா, ஜூலை. 13 - பீகார் மாநிலம் பாட்னாவில் மேல்நிலை கல்வித் துறையில் துணை இயக்குனராக இருப்பவர் ராதாகிருஷ்ணசிங் யாதவ். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது. பள்ளிகளுக்கு அங்கீகாரம் கொடுப்பது, மாணவர்களுக்கு சீட் கொடுப்பது உட்பட கல்வித் துறையில் உள்ள பல ஒதுக்கீடுகளுக்கு அவர் லஞ்சம் பெற்றதாக கூறப்பட்டது. இதையடுத்து பாட்னா போலீசார் அவரை பொறி வைத்து பிடிக்க திட்டமிட்டனர். 

எனவே ஒருவரிடம் பணம் கொடுத்து ராதா கிருஷ்ணனிடம் லஞ்சமாக கொடுக்க செய்தனர். அந்த பணத்துடன் ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்ற போது அவரை பின் தொடர்ந்து சென்ற போலீசார் அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். 

ராதாகிருஷ்ணன் ஒவ்வொரு தடவையும் லஞ்சம் வாங்கும் போது தன் மனைவிக்கு தங்க நகைகள் வாங்கி குவித்து இருப்பது சோதனை மூலம் தெரியவந்தது. அவர் வீட்டு பீரோவில் இருந்து 230 ஜோடி கம்மல், 30 மோதிரம், 38 ஜோடி வளையல்களை போலீசார் கண்டெடுத்து பறிமுதல் செய்தனர். இவை தவிர வெள்ளி ஒட்டியாணம், வெள்ளி கொலுசுகளும் ஏராளமாக சிக்கின. நகைகள் தவிர பல வீடுகள் இருப்பதற்கான சொத்து ஆவணங்களும் ராதாகிருஷ்ணன் வீட்டில் இருந்தன. ரூ. 25 கோடி மதிப்புக்கு அந்த சொத்துக்கள் இருந்தன. மேலும் வங்கிகளிலும் அவர் லட்சக்கணக்கில் பணம் போட்டு வைத்திருப்பது தெரியவந்தது. மாத சம்பளம் வாங்கும் ஒரு கல்வி அதிகாரி இப்படி லஞ்சம் வாங்கி குவித்திருப்பது போலீசாரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்: