குழந்தைகள் 27 பேர் பலி: பள்ளி முன்பு புதைத்த பெற்றோர்

வியாழக்கிழமை, 18 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

சரன், ஜூலை. 19 - பீகார் மாநிலம் சரன் மாவட்டம் கந்தவான் கிராமத்தில் நேற்று முன்தினம் மதிய உணவு சாப்பிட்ட 80 குழந்தைகள் மயங்கி விழுந்தனர். அவர்களை பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் 10 குழந்தைகள் பலியானார்கள். அதன் பிறகு கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் 10 குழந்தைகள் பலியானார்கள்.நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி 7 குழந்தைகள் இறந்தன. இதனால் சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது. 23 குழந்தைகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. 

இந்த துயர சம்பவத்தால் அந்த கிராமமே துயரத்தில் மூழ்கியது. குழந்தைகளின் உடல்களை பெற்றோர் தோளில் தூக்கிக் கொண்டும், மடியில் வைத்துக் கொண்டும் கதறி அழுத காட்சி நெஞ்சை பிழிவதாக இருந்தது. குழந்தைகள் உணவு சாப்பிட்டதும் குமட்டுவதாக தெரிவித்தனர். ஆனால் சமையல்கார பெண் அதை பொருட்படுத்தாமல் சீக்கிரம் சாப்பிடுங்கள் என்று சப்தம் போட்டு எல்லோரையும் சாப்பிட வைத்திருக்கிறார். இதை கேள்விப்பட்ட பெற்றோர் பள்ளி மீது ஆவேசம் அடைந்துள்ளனர். அவர்கள் இறந்த தங்கள் குழந்தைகளை பள்ளிக்கூடத்தின் முன் குழி தோண்டி புதைத்து எதிர்ப்பை தெரிவித்தனர். 

மீதமுள்ள உடல்கள் ஊருக்கு வெளியே ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. மதிய உணவு பரிமாறப்பட்டதும் பிங்கி குமாரி என்ற சிறுமிதான் முதலில் உணவு குமட்டுவதாக புகார் கூறினார். அதை கேட்காத ஆயா உனக்கு தினமும் உணவை குறை சொல்வதே வேலையா என்று திட்டியுள்ளார். ஆனால் அடுத்து அபிஷேக்குமார் என்ற மாணவரும் சாப்பாடு ஒரு மாதிரியாக இருக்கிறது என்று சொன்னான். ஆசிரியை மஞ்சு சாப்பாடு கொஞ்சம் காரமாகத்தான் இருக்கும். அமைதியாக சாப்பிடுங்கள் என்று மிரட்டினார். உடனே சமையல்கார ஆயா, மஞ்சு உணவை ருசி பார்த்தார். இதில் அவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரும் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். 

ஒரு குழந்தை உணவு சரியில்லை என்று சொன்னவுடனே ஆசிரியைகள் அதில் கவனம் செலுத்தி இருந்தால் குழந்தைகளை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் எல்லா குழந்தைகளையும் மிரட்டி சாப்பிட வைத்ததால்தான் இந்த சோகம் ஏற்பட்டதாக குழந்தைகளின் பெற்றோர் தெரிவித்தனர். மாநில கல்வி மந்திரி பி.கே.  சாஹி சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். உணவு விஷமானதா அல்லது உணவில் விஷம் கலக்கப்பட்டதா என்பது தெரியவில்லை. இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றார். ஆனால் பாத்திரங்களை சரியாக கழுவாததாலும், பாத்திரத்தை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ரசாயன பொருட்கள் சரிவர கழுவப்படாமல் ஒட்டிக் கொண்டு இருந்ததாலும்தான் இந்த துயர சம்பவம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: