டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு

வியாழக்கிழமை, 25 ஜூலை 2013      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஜூலை.26 - டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சிறுவன் மீதான தீர்ப்பை சிறார் சீர்திருத்த கோர்ட்டு வரும் ஆக்ஸ்டு 5-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் மாதம் 26-ம் தேதி டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி கற்பழித்து தாக்கப்பட்டார். உயிருக்கு போராடிய நிலையில் டெல்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அந்த மாணவி குணமாகாததால் சிங்கப்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் அங்கும் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். இந்த படுகொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஒருவன் 18 வயதிற்கும் கீழ் உள்ளவனாக இருந்ததால் அவன் மட்டும் சிறார் சீர்திருத்த சிறையில் அடைக்கப்பட்டான் மற்ற 5 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களில் ராமன் சிங் என்பவன் தற்கொலை செய்து கொண்டான். மீதிப்பேர் இன்னும் சிறையில் இருக்கிறார்கள். அவர்கள் மீதான விசாரணை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணை இன்னும் ஒரு சில மாதங்களில் முடிந்துவிடும் என்று தெரிகிறது. 

இதற்கிடையில் சிறுவன் மீதான விசாரணை சிறார்களுக்கான கோர்ட்டில்  கடந்த மாதமே முடிவடைந்து விட்டது. தீர்ப்பு அளிப்பது கடந்த 11-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. கடந்த 11-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு கடந்த 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. நேற்று தீர்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வரும் ஆகஸ்டு 5-ம் தேதிக்கு நீதிபதி கீதாஞ்சலி கோயல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் கோர்ட்டில் இது தொடர்பான வழக்கு ஒன்று இருப்பதுதான் என்று அரசு தரப்பு வழக்கறிஞர் ராஜேஷ் திவாரி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பெரிய குற்றங்களை 16 வயதிற்கும் மேற்பட்டவர்கள் செய்திருந்தால் அவர்கள் மீது  வயது வந்தோர்களுக்கான கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என்று அகில இந்திய ஜனதா கட்சி தலைவர் டாக்டர். சுப்பிரமணியசுவாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு இன்னும் முடியவில்லை. அதனால்தான் தீர்ப்பு மூன்றாவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

23 வயது மருத்துவ மாணவி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியில் மட்டுமல்லாது நாடே கொந்தளித்தது. சுமார் 3 வார காலம் நாடு முழுவதும் குறிப்பாக தலைநகர் டெல்லியில் மாமூல் வாழ்க்கையே ஸ்தம்பிக்கும்படி மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த கொந்தளிப்பானது பெண்களுக்கெதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வழிவகுத்தது. 

இதை ஷேர் செய்திடுங்கள்: