தேர்தல்: சுஷ்மா சுவராஜை எதிர்த்து திக்விஜய் சிங் போட்டி

வெள்ளிக்கிழமை, 23 ஆகஸ்ட் 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், ஆக. 24 - பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் இருந்து எம்.பி.ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஆவார். கடந்த 2009-ம் ஆண்டு தேர்தலின் போது அவர் அந்த தொகுதியில் 4 லட்சம் ஓட்டுகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் போது மீண்டும் விதிஷா தொகுதியில் போட்டியிட சுஷ்மா சுவராஜ் முடிவு செய்துள்ளார். இதையொட்டி அவர் அடிக்கடி விதிஷா தொகுதிக்கு சென்று வருகிறார்.

இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் நேற்று முன்தினம் மத்திய பிரதேசம் மாநிலத்துக்கு சென்று பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய பிரதேசத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தான் போட்டியிட இருப்பதை உறுதிபடுத்தினார்.

விதிஷா தொகுதியில் போட்டியிட திக்விஜய்சிங் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. பா.ஜ.க. கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் திக்விஜய்சிங் போட்டியிடுவதன் மூலம் சுஷ்மா சுவராஜூக்கு சவாலை ஏற்படுத்த முடியும் என்று காங்கிரஸ் தலைவர்களும் கருதுவதாக கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியான திக்விஜய் சிங்கின் சொந்த ஊர் ராஜ்கர் நகரமாகும். ஆனால் ராஜ்கர் தொகுதியில் போட்டியிட போவதில்லை என்று திக்விஜய்சிங் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். இதனால் விதிஷா தொகுதியில் அவர் நிற்பார் என்று தெரிகிறது. அத்தகைய சூழ்நிலை உருவானால், திக்விஜய்சிங்-சுஷ்மா சுவராஜ் இடையிலான நேரடி போட்டி நாடெங்கும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும்.

இதை ஷேர் செய்திடுங்கள்: