முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கலைஞர் டி.வி.யில் கனிமொழிக்கு முக்கிய பங்கு

வெள்ளிக்கிழமை, 13 மே 2011      அரசியல்
Image Unavailable

 

புதுடெல்லி, மே13 - கலைஞர் டி.வி. நிர்வாகத்தில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்ற கனி மொழியின் வாதத்தை பொய்யாக்கும் விதத்தில் கலைஞர் டி.வி. நிர்வாக விவகாரங்களில் கனிமொழிக்கு ஈடுபாடு உள்ளது என்று அவரது உறவினர்களில் ஒருவரான பி.அமிர்தம் சி.பி.ஐ.யிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கடந்த 2008 ம் ஆண்டு செல்போன் கம்பெனிகளுக்கான 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு பேரிழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை குழு  தனது அறிக்கையில் கூறியிருந்தது. 

இதை அடுத்து இந்த விவகாரம் விசுவரூபம் எடுத்த நிலையில் இந்த ஒதுக்கீடுகளை செய்த அப்போதைய மத்திய தொலை தொடர்பு துறை அமைச்சர், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ. ராசா, சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பிறகு  டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா மற்றும் ராசாவின் அப்போதைய உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த் பெகூரா ஆகியோர் உள்பட மேலும் 8 பேரும் கைது  செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனம் கலைஞர் டி.விக்கு ரூ. 200 கோடியை அளித்துள்ளது. ஆனால் இந்த பணத்தை  தாங்கள் அதே கம்பெனியிடம் திருப்பி செலுத்தி விட்டதாக கலைஞர் டி.வி. தெரிவித்துள்ளது. என்றாலும்  இந்த ரூ.200 கோடி எதற்காக கலைஞர் டி.வி.க்கு வழங்கப்பட்டது என்பது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த ஊழல் வழக்கில் சி.பி.ஐ.தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான கனிமொழி, சரத் குமார் ( நிர்வாக இயக்குனர் ) ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதை அடுத்து இவர்கள் இருவரும் டெல்லியில் பாட்டியாலா இல்லத்தில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் சமீபத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது கலைஞர் டி.வி. நிர்வாக விஷயங்களில் கனிமொழிக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்று  அவரது சார்பில் வாதாடிய பிரபல வக்கீல் ராம்ஜேத் மலானி வாதாடினார்.

ஆனால் இந்த கூற்றை பொய்யாக்கும் வகையில் கனிமொழியின் உறவினரான பி.அமிர்தம் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

இவர் கலைஞர் டி.வி.யில் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றியவர்.

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மூத்த சகோதரி ( அக்காள் ) பெரிய நாயகத்தின் மூத்த மகன்தான் இந்த பி.அமிர்தம்.

குற்றவியல் சட்டம் ( சி.ஆர்.பி.சி. ) பிரிவு 161 ன் கீழ் இந்த வாக்குமூலத்தை சி.பி.ஐ.யிடம் அமிர்தம் சமர்ப்பித்துள்ளார்.

கலைஞர் டி.வி.யின் அன்றாட விவகாரங்களில் கனிமொழி தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்று  அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கலைஞர் டி.வி. பிரைவேட் லிமிடெட் என்ற இந்த நிறுவனத்தை தோற்றுவித்த இயக்குனர்களில் கனிமொழியும் ஒருவர் என்று அமிர்தம்  கூறியுள்ளார். இருந்தாலும் கடந்த 2007, ஜூன் 20 ம் தேதி  இயக்குனர்கள் குழுவில் இருந்து கனிமொழி விலகி விட்டார். மத்திய உள்துறை அமைச்சகத்திடமிருந்து வரவேண்டிய அனுமதிகள்  காலதாமதமானதால் கனி மொழி தனது  இயக்குனர் பதவியிலிருந்து விலகினார். எனினும், கலைஞர் டி.வி.யின் அன்றாட விவகாரங்களில் அவர் ஆர்வத்துடன் செயல்பட்டு வந்தார் என்றும் அமிர்தம் கூறியுள்ளார்.

குற்றவியல் நடைமுறை விதி ( சி.ஆர்.பி.சி. ) எண் 161 ன் கீழ் ஒரு போலீஸ் அதிகாரியின் சாட்சியம் நீதிமன்றங்களில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனவே கனிமொழிக்கு கலைஞர் டி.வி. யில் ஈடுபாடு இருக்கிறது என்பதை நிரூபிப்பதற்காக பிற சாட்சியங்களை சி.பி.ஐ. தயாரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை அடுத்தே அமிர்தத்திடமிருந்து இந்த சாட்சியம் பெறப்பட்டுள்ளது.

2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் சட்ட விரோதமாக ஆதாயம் பெற்ற டி.பி. குழும கம்பெனியிடமிருந்து  ரூ.200 கோடியை கலைஞர் டி.வி. பெற்றுள்ளது. இதை கனிமொழியும் சரத் குமாரும் பெற்றுக்கொண்டனர். அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா காட்டிய  சாதகமான சலுகைகளின்படி இந்த ஒதுக்கீடுகளை டி.பி. ரியாலிட்டீஸ் குழுமத்தின் ஒரு நிறுவனமான ஸ்வான் டெலிகாம் பெற்றுள்ளது. எனவேதான் கனிமொழி, சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இரண்டாவது குற்றப்பத்திரிகையில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று சி.பி.ஐ. கூறியுள்ளது.

ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் மூலமாக ரூ. 200 கோடி 2008 - 09 ம் ஆண்டில் கலைஞர் டி.வி.க்கு சென்றுள்ளது என்று ஏற்கனவே சி.பி.ஐ.அதிகாரிகள் டெல்லி சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

டி.பி. ரியாலிட்டீஸ் குழுமத்திற்கு சொந்தமான சினியுக் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட்டிடம் இருந்து உத்தரவாதமில்லா கடனாக ரூ. 200 கோடியை கலைஞர் டி.வி.பெற்றுள்ளது. ஆனால் உண்மையில், கலைஞர் டி.வி.யில்  ஒரு குறிப்பிட்ட அளவு பங்குகளை விலைக்கு வாங்கவே இந்த பணம் கலைஞர் டி.வி.க்கு கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் இந்த நோக்கம் நிறைவேறாமல் போய் விட்டது என்று அமிர்தம்  கூறியுள்ளார்.

 என்றாலும் இந்த ரூ. 200 கோடி கடன் வட்டியுடன் திருப்பி அதே கம்பெனிக்கு திருப்பி செலுத்தப்பட்டு விட்டது என்றும் சி.பி.ஐ.யிடம் அமிர்தம் கூறியுள்ளார்.

கலைஞர் டி.வி.யில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு 60 சதவீதமும், கருணாநிதியின் மகள் கனிமொழிக்கு 20 சதவீதமும், சரத்குமாருக்கு (நிர்வாக இயக்குனர்)20 சதவீத பங்குகளும் உள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!