மேலவைத் தேர்தலுக்கு இடைக்காலத் தடை - பா.ஜ.க ஆதரவு

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
bjpflag 0

சென்னை, பிப்.24 - தமிழகத்தில் மேலவைத் தேர்தலுக்கான நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதை தமிழக பா.ஜ.க. தலைவர் ராதாகிருஷ்ணன் வரவேற்றுள்ளார். தமிழகத்தில் இருந்த சட்டமேலவையை 1986 ல் எம்.ஜி.ஆர். கலைத்தார். 1989, 1996 ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. சட்டமேலவையை கொண்டுவர முயற்சி செய்தது. 2010 ஏப்ரல் 11 ம் தேதி மேலவை அமைப்பதற்கான தீர்மானம் சட்டப் பேரவையில் நிறைவேறியது. அதற்கு அவசர அவசரமாக ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. வரும் தேர்தலில் தி.மு.க.வின் தோல்வி உறுதி என்பதால் அவசர அவசரமாக மேலவைத் தேர்தலை நடத்தி முடிக்கவும் முடிவு செய்தார்கள். இதற்காக பல லட்சம் பட்டதாரிகளைக் கொண்ட தமிழகத்தில் சில ஆயிரம் பட்டதாரிகளையே வாக்காளர்களாக சேர்த்தனர். விரைவில் காலாவதியாக உள்ள எம்.எல்.ஏ.க்களைக் கொண்டும் புதிய மேலவை உருவாக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மேலவைத் தேர்தலுக்கு பாராளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற விதிமுறையும் பின்பற்றப்படவில்லை. இந்த ஜனநாயகப் படுகொலையை கண்டித்து தேர்தல் ஆணையம் வரை பா.ஜ.க. சென்று போராடியது. தற்போது பா.ஜ.க. தொடர்ந்த வழக்கில் தமிழக சட்டமேலவை தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு அம்சமாகும் என்று ராதாகிருஷ்ணன் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: