முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக மக்கள்

ஞாயிற்றுக்கிழமை, 15 மே 2011      அரசியல்
Image Unavailable

சென்னை,மே.15 - சட்டப் பேரவை தேர்தல் முடிவுகளின் மூலம் தி.மு.க.வின் குடும்ப ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் ஜி. ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலர் தா.பாண்டியன் ஆகியோர் தெரிவித்தனர்.

தமிழக சட்டப் பேரவை தேர்தல் முடிவுகள் குறித்து ஜி. ராமகிருஷ்ணன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

தேர்தல் முடிவுகள் திருப்தி அளிக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என எதிர்பார்த்தோம். எதிர்பார்த்ததை போலவே எங்கள் கூட்டணி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. குடும்ப ஆட்சிக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்து விட்டனர். 5 ஆண்டு கால மக்கள் விரோத ஆட்சியை தி.முக.. நடத்தியது. ஆட்சி மாற்றத்தை தமிழக மக்கள் உருவாக்கி உள்ளனர். 

மத்தியில் காங்கிரசும், மாநிலத்தில் தி.மு.க.வும் மிகப் பெரிய ஊழல் கட்சிகளாக உள்ளன. மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு பிரச்சினை மற்றும் எல்லா துறைகளிலும் குடும்ப ஆதிக்கம் என தி.மு.க. ஆட்சியில் மக்கள் பிரச்சினைகள் மலை போல் குவிந்து விட்டன. இதனால் ஆளும் தி.மு.க.வுக்கு எதிரான அதிருப்தியை மக்கள் தேர்தலின் மூலம் வெளிப்படுத்தி உள்ளனர். இதுவே அ.தி.மு.க கூட்டணியின் அமோக வெற்றிக்கு காரணம். 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சினையில் மக்களிடம் ஏற்பட்ட தாக்கமும் தி.மு.க. தோல்விக்கு முக்கிய காரணம் என்றார். 

தா. பாண்டியன் கூறும் போது, மக்கள் மாற்றத்தை விரும்பி நல்ல தீர்ப்பை அளித்துள்ளனர். குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தி.மு.க.வின் தொடர் தவறுகளால் மாநிலத்தையே தங்கள் குடும்ப சொத்தாக ஆக்கியுள்ளனர்.இதனால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. கூட்டணியில் 5 கட்சிகளுக்கு மேல் இருந்தும் அவர்களால் 45 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை. முழுக்க முழுக்க ஊழலில் மூழ்கி விட்ட கட்சிகளாக காங்கிரசும், தி.மு.க.வும் மாறி விட்டன. பணப்பட்டுவாடா செய்யவில்லை என்றால் இந்த தொகுதிகளை கூட தி.மு.கவால் கைப்பற்றியிருக்க முடியாது என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony