லிபியாவில் நெல்லை மாவட்ட தொழிலாளி பலி - வைகோ வேண்டுகோள்

வியாழக்கிழமை, 24 பெப்ரவரி 2011      அரசியல்
vaiko 0

 

சென்னை, பிப்.24 - லிபியாவில் நடைபெற்றுவரும் மக்கள் புரட்யின்போது நெல்லை மாவட்ட தொழிலாளி பலியானார். இவரது உடலை இந்தியா கொண்டுவர உதவி செய்யுமாறு மத்திய அமைச்சர்களை வைகோ கேட்டுக்கொண்டார்.  இதுகுறித்து  இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, அயல்நாடு வாழ் இந்தியர் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி ஆகியோருக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ  தொலைநகல் வழியாக (23.2.2011)அன்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த தொலைநகலில் கூறப்பட்டுள்ளதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், தலைவன்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த முருகையா (42) (த/பெ சண்முகையா தேவர்), லிபிய நாட்டில் அரசுப் படைகள் நடத்திய

தாக்குதலில் உயிர் இழந்து உள்ளார். முருகையா உள்ளிட்ட 26 இந்தியத் தொழிலாளர்களை, தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் லிபிய நாட்டில் மின்கம்பங்கள் அமைக்கும் பணிக்காக அமர்த்தி உள்ளது. பிப்ரவரி 22 ஆம் நாள் லிபிய அரசுப் படைகள் தொழிலாளர்கள் தங்கிய இடத்தில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். தொழிலாளர்கள் வெளியேற முயன்றபோது, திடீரென படையினர் துப்பாக்கியால் சுட்டதில் முருகையா உயிர் இழந்தார், அசோக்குமார் என்பவர் காயம் அடைந்து உள்ளார். இந்தத் தகவலை லிபியாவில் இருந்து தொழிலாளர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் உறவினர்களிடம் தெரிவித்து உள்ளனர். ஆனால், லிபிய அரசு இந்த உண்மையை மறைத்து முருகையா விபத்தில் இறந்தார் என்று கதை கட்டி உள்ளது. இந்திய வெளி உறவுத்துறையும் அதை ஏற்றுக்கொண்டு முருகையா விபத்தில் இறந்ததாகவே கூறுவது வேதனை அளிக்கிறது.

முருகையாவின் உடலை உடனடியாகத் தமிழகத்துக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும், ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து தகுந்த இழப்பு ஈட்டுத் தொகை பெறுவதற்கும் ஆவன செய்திடுமாறு தங்களை அன்புடன் வேண்டுகிறேன். லிபியாவில் உள்ள இதர தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: