தேவயானி - சங்கீதா ஒப்பந்தம் நீதிமன்றத்தில் தாக்கல்

Image Unavailable

 

வாஷிங்டன், ஜன, 13 - இந்திய துணைத் தூதர் தேவயானிக்கும், அவரது பணிப்பெண் சங்கீதாவுக்கும் இடையேயான இரண்டு ஒப்பந்தங்கள் நியூயார்க் விசாரணை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தேவயானி மீது விசா மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள், நியூயார்க் விசாரணை நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. அப்போது தேவயானிக்கும், சங்கீதாவுக்கும் இடையே ஊதியம் தொடர்பான ஒப்பந்தங்களின் நகல்களை, இந்த வழக்கிற்கான ஆதாரமாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்தார்.

இருவருக்கும் இடையே 2012-ம் ஆண்டு நவம்பர் 11-ம் தேதி மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் அமெரிக்க சட்டத்தின்படி ஒரு மணி நேரத்துக்கு 9.75 அமெரிக்க டாலர் (சுமார் ரூ.599) சங்கீதாவுக்கு அளிக்கப்படும். வாரத்துக்கு 40 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்றும், ஞாயிறு விடுமுறையென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தைத்தான், விசா பெறுவதற்கான நேர்காணலின்போது அமெரிக்க அதிகாரிகளிடம் தேவயானியின் அறிவுறுத்தலின்படி சங்கீதா காட்டியுள்ளார்.

2012-ம் ஆண்டு நவம்பர் 21-ம் தேதி ஏற் படுத்தப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் சங் கீதாவுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் ஊதியம் அளிக்கப்படும் என்றும், ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் பணிபுரிந்தால் கூடுதலாக ரூ.5 ஆயிரம் அளிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது மாதத்துக்கு அதிகபட்சம் ரூ.30 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மேற்கோள் காட்டிப் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர் பிரீத் பராரா, “அமெரிக்க சட்டப்படி தர வேண்டிய ஒரு மணி நேரத்துக்கு 9.75 டாலர் ஊதியத்தை வழங்க தேவயானிக்கு விருப்பமேயில்லை. அதன் காரணமாகத்தான் குறைவான ஊதியத்தில் தனியாக ஓர் ஒப்பந்தத்தை அவர் மேற்கொண்டுள்ளார்.

ஆனால், மாதம் ரூ. 30 ஆயிரம் ஊதியம் என்று உண்மையைக் கூறினால் சங்கீதாவுக்கு விசா கிடைக்காது என்பதால், ஒரு மணி நேரத்துக்கு 9.75 டாலர் (சுமார் ரூ.599) என்ற பொய்யான தகவலை தேவயானி அளித்துள்ளார்” என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ