ஈராக்கில் தீவிரவாதிகள் தாக்குதலில் 72 பேர் சாவு

Image Unavailable

 

பாக்தாத், ஜன.17 - ஈராக்கில் துக்க வீட்டில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் 72 பேர் பலியாயினர். ஈராக்கில் கடந்த சில ஆண்டுகளாக ஷியா-சன்னி பிரிவினர் இடையே மோதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஷியா பிரிவைச் சேர்ந்த நூரி அல் மாலிக்கி பிரதமராக பதவி வகித்த நிலையில், சன்னி தீவிரவாதிகள் பல்வேறு இடங்களிலும் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அல் கொய்தாவின் ஆதரவோடு அங்கு தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு நேட்டோ படைகள் வாபஸ் பெறப்பட்ட நிலையில், இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் துப்பாக்கிச்சூடு, குண்டு வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் காரணமாக 72 பேர் பலியாயினர். பகுபா நகருக்கு மேற்கே சாதுப் என்ற கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு  முன்பு இறந்த சன்னி பிரிவு போராளி ஒருவரின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமானோர் திரண்டனர். அப்போது ஷியா பிரிவினர் வைத்த குண்டு வெடித்தது. இதில் 12 பேர் கொல்லப்பட்டனர். 18 பேர் படுகாயமடைந்தனர். இதேபோல், மோசுல் நகருக்கு தெற்கே அயின் அல் ஜாஸ் என்ற இடத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் போலீசாரின் ரோந்து வாகனம் அதில் சிக்கி 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர். பாக் தாத்துக்கு கிழக்கே மாமில் என்ற இடத்தில் 6 லாரி டிரைவர்களை தீவிரவாதி ஒருவன் சுட்டு கொன்றான். இதற்கு பதிலடியாக ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் மாவட்டங்களில் சன்னி பிரிவினர்  பதில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்கொலை படையினரின் பல்வேறு சம்பவங்களில் 40 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக ராணுவ மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். ஈராக்கில் கடந்த சில வருடங்களாக அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வர சர்வதேச நாடுகள் உதவ வேண்டும் என பிரதமர் நூரி அல் மாலிக்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ