அ.தி.மு.க. கூட்டணிக்கு வந்தது தே.மு.தி.க.

வெள்ளிக்கிழமை, 25 பெப்ரவரி 2011      அரசியல்
AIADMK - DMDK Photo 2

சென்னை, பிப்.25 - அ.தி.மு.க. கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க.வும் வந்து விட்டது. இக்கட்சி நிர்வாகிகள் நேற்று அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு வந்து அ.தி.மு.க. முன்னணி தலைவர்களுடன் தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பண்ருட்டி ராமச்சந்திரன், அ.தி.மு.க. -  தே.மு.தி.க. மக்கள் விரும்புகிற ஒரு வெற்றிக்கூட்டணி என்று தெரிவித்தார்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட்கள், மனிதநேய மக்கள் கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம், புதிய தமிழகம், குடியரசு கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் ஆகிய கட்சிகள் உள்ளன. இந்த கட்சிகளில் புதிய தமிழகம்  கட்சி, குடியரசு கட்சி, மூவேந்தர் முன்னணி கழகம் மனித நேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு அ.தி.மு.க. கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு விட்டன. ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு தொகுதிகள் விரைவில் ஒதுக்கப்படவுள்ளன. தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில்  அ.தி.மு.க. அணியில் தே.மு.தி.க.வும் வந்து இணைய வேண்டும் என்று இரு கட்சி தொண்டர்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் விரும்பினார்கள். அவர்களது விருப்பம் நேற்று நிறைவேறியது. அ.தி.மு.க. அணிக்கு விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.க. நேற்று வந்து சேர்ந்து விட்டது.  
அ.தி.மு.க.வுடன், தே.மு.தி.க. கட்சி சார்பில் தொகுதி உடன்பாடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு தே.மு.தி.க.வின் அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன், இளைஞர் அணி செயலாளர் எல்.கே.சுதீஷ், கட்சியின் பொருளாளர் ஆர்.சுந்தர்ராஜன் ஆகியோர் வந்தனர். அவர்களை அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினர் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.
தே.மு.தி.க.வினர் அ.தி.மு.க.வின் தலைமைக் கழகத்திற்கு வந்தபோது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவினருடன் தே.மு.தி.க. தேர்தல் பங்கீட்டு குழுவினர் பேச்சுவார்த்தையை தொடங்கியபோது இருதரப்பிலும் இனிப்பு வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். சுமார் 1 1/4 மணி நேரம் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இருதரப்பிலும் பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் வெளியே வந்தபோது தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ரூட்டி ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மக்கள் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்கும் வகையில் அக்கரையோடு உள்ள அரசியல் கட்சிகள் ஒரு அணியாக உருவாகவேண்டும் என்ற எண்ணம் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்திடம் ஏற்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் அ.தி.மு.க. குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்த வந்துள்ளோம். மக்கள் விரும்புகிற கூட்டணி இந்த கூட்டணி. வருகிற தேர்தலில் இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெரும். இது வெற்றி கூட்டணி.
இவ்வாறு பண்ரூட்டி கூறினார்.
இதையடுத்து நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி:- அ.தி.மு.க.வுடன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்பொழுது?
பதில்:- இருதரப்பிலும் கூட்டணி குறித்து பேசி முடித்துள்ளோம். ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்துள்ளது. மீண்டும் கூடி பேச திட்டமிட்டுள்ளோம்.  வரும் தேர்தலில் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.
கேள்வி:- விஜயகாந்த் மக்களுடன் கூட்டணி, தெய்வத்துடன் கூட்டணி என்று கூறினார். இப்பொழுது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளாரே?
பதில்:- ``மக்கள் குரலே, மகேசன் குரல்'' இப்போது நடக்கும் தி.மு.க. ஆட்சியை தொலைத்துக் கட்டவும், தேர்தலில் புதிய ஆட்சி மலரவும் மக்களின் குரலும், தெய்வத்தின் குரலும், ஒன்றாக உள்ளது. அதனால்தான் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.
கேள்வி:- ஜெயலலிதாவை, விஜயகாந்த் எப்போது சந்தித்து பேசுவார்?
பதில்:- இருதரப்பிலும், பேச்சுவார்த்தை முடிந்த பின்னர் சந்தித்து பேசுவார்.
கேள்வி: ஆட்சியில் பங்கை நீங்களும் கேட்பீர்களா?
பதில்: அந்த ஆசையெல்லாம் எங்களுக்கு இல்லை.இவ்வாறு பண்ருட்டி பதில் அளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்: