முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கு திட்டங்களே- ஆர்.பி. உதயகுமார் புகழாரம்

திங்கட்கிழமை, 30 மே 2011      தமிழகம்
Image Unavailable

விருதுநகர்,மே.- 30 - தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளில் கொடுத்துள்ள திட்டங்கள் அனைத்தும் தொலைநோக்கு திட்டங்கள்தான் என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று தமிழக தகவல் தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்ற ஆர்.பி. உதயகுமார், முதல் முறையாக நேற்று விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்தார். பின்னர் அவர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தார். இதையடுத்து விருதுநகரில் உள்ள முத்துராமலிங்கத் தேவர், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுக்கு மலர் மாலையணிவித்து மரியாதை செய்தார்.
பின்னர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு விஜயம் செய்த அவரை மாவட்ட கலெக்டர் சண்முகம், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமன் ஆகியோர் பூங்கொடுத்து கொடுத்து வரவேற்றனர். அதைத் தொடர்ந்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தினந்தோறும் அரசு துறை சார்ந்த கூட்டங்களை நடத்தி திட்டங்களை விரைந்து முடிக்க ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்கள் அனைத்தும் பயனுள்ள திட்டங்கள். கடந்த மைனாரிட்டி தி.மு.க ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் பெயரளவில் மட்டுமே இருந்தன. ஆனால் அ.தி.மு.க ஆட்சியில் திட்டங்கள் அனைத்தும் முறையாக செயல்படுத்த வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா எங்களை அறிவுறுத்தி வருகிறார். கடந்த மைனாரிட்டி ஆட்சியில் காவல் துறை தி.மு.க.வினரின் ஏவல் துறையாக இருந்தது. இதனால் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு, கொலை, கொள்ளை என தினந்தோறும் அரங்கேறின.
ஆனால் தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தமிழக முதல்வர் காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கி விட்டார். மேலும் அனைத்து துறைகளிலும் விருதுநகர் மாவட்டம் முதன்மை மாவட்டமாக கொண்டு வந்து எனது பணியை திருப்திபடுத்துவேன். விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டங்கள் அனைத்தையும் ஆய்வு மேற்கொண்டு விரைவில் செயல்படுத்துவோம் என்றார். பின்னர் அரசு துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தம் தொலைநோக்கு திட்டங்களாகும். சிறப்பாக பணியாற்றுபவர்கள் கவுரவிக்கப்படுவார்கள் என்றார். கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சண்முகம், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பிரபாகரன், மாவட்ட வருவாய் அலுவலர் ராமன், சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் கஜேந்திரபாலாஜி, ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் கோபால்சாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: