கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பு நிறுத்திவைப்பு

Image Unavailable

 

புதுடெல்லி, மே 31 - 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கருணாநிதியின் மகள் கனிமொழியின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை டெல்லி ஐகோர்ட்டு நிறுத்திவைத்துள்ளது. இதனிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சினியுக் நிறுவனத்தின் இயக்குனர் கரீம் முரானி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  

ரூ. 1.76 லட்சம் கோடி 2 ஜி. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சந்தோலியா, சித்தார்த்த பெகூரா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா மேலும் சில கம்பெனிகளின் 5 முக்கிய அதிகாரிகள், கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோர் உள்பட மொத்தம் 13  பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

இந்த வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகள் தாக்கல் செய்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில் கருணாநிதியின் மகளும், கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனரும் பங்குதாரருமான சரத்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் கனிமொழி, சரத்குமார் ஆகியோருக்கு ஜாமீன் வழங்க டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே மறுத்துவிட்டது. இதையடுத்து இவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரி டெல்லி ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். 

இந்த மனுக்கள் மீது ஏற்கனவே விசாரணை நடத்திய டெல்லி ஐகோர்ட்டு இவற்றின் மீதான தீர்ப்பை மே 30 ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அதன்படி நேற்று (மே 30) இந்த மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் நடைபெற்றது. இருதரப்பு வக்கீல்களின் வாத பிரதிவாதங்களை கேட்ட ஐகோர்ட்டு நீதிபதி இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை நிறுத்திவைத்துள்ளார். 

இந்த நிலையில் டி பி ரியாலிட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடியை கலைஞர் டி.வி.க்கு பரிமாற்றம் செய்த சினியுக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கரீம் முரானி தனக்கு முன்ஜாமீன் கேட்டு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சிறப்பு நீதிபதி ஓ.பி.ஷைனி நிராகரித்துவிட்டார். இதையடுத்து அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கரீம் மொரானிக்கு நீதிமன்ற காவல் விதித்ததை அடுத்து அவர் நேற்று டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

டி.பி.ரியாலிட்டீஸ் நிறுவனத்திடம் இருந்து ரூ. 214 கோடியை கலைஞர் டி.வி.க்கு கைமாற்றம் செய்ய சினியூக் பிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் கரீம் மொரானி ரூ. 6 கோடியை கமிஷனாக பெற்றுள்ளார் என்று சி.பி.ஐ. தனது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

வீடியோ