முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராணா வழக்கில் வரும் 8-ம் தேதி தீர்ப்பு

சனிக்கிழமை, 4 ஜூன் 2011      இந்தியா
Image Unavailable

 

சிகாகோ,ஜூன்.4 - மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவின் சிகாகோ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ராணாவின் வழக்கில் வரும் 8 ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது. மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக அமெரிக்காவில் கைது செய்யப்பட்டவர் ஹூசேன் ராணா. பாகிஸ்தானை சேர்ந்த இவர் பின்னர் கனடாவில் குடியுரிமை பெற்றார். மும்பை தாக்குதல் வழக்கில் முக்கிய குற்றவாளியும், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டவருமான ஹெட்லிக்கு நெருக்கமானவர் இவர். மும்பை தாக்குதல் சதியில் ராணாவுக்கு முக்கிய பங்கு உண்டு என்பது முக்கிய குற்றச்சாட்டு. இந்த வழக்கின் தீர்ப்பை சிகாகோ நீதிமன்றம் வரும் 8 ம் தேதி அறிவிக்கவிருக்கிறது.

முன்னதாக நடைபெற்ற விசாரணையின் போது அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் சாட்சியம் அளித்தனர். மும்பை தாக்குதல் தொடர்பாக ஹெட்லி, ராணா மற்றும் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அதிகாரியான சவுத்ரி கான் என்ற இக்பால் ஆகியோரிடையே நடைபெற்ற இ மெயில் பரிமாற்றங்கள் குறித்து இந்த 5 பேரும்தான் ஆய்வு நடத்தி உண்மைகளை வெளிக் கொண்டு வந்தனர். மேலும் ஹெட்லியும், இக்பாலும் தன்னை தொடர்பு கொள்ள தனது தொலைபேசி எண்ணையும் ராணா கொடுத்துள்ளார். தவிர ஹெட்லிக்கு ராணா விமானத்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்துள்ளார். அது தொடர்பாக ஆவணங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. 

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை 6 ம் தேதி நடைபெறவுள்ளது. அப்போது ராணாவுக்கு மும்பை தாக்குதலில் தொடர்பு உள்ளதை நிச்சயமாக நிரூபிக்கும் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் அளிக்கப்படும் என்று தெரிகிறது. ராணாவும், ஹெட்லியும் பாகிஸ்தானில் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். முன்னதாக இருவரும் கைதாகும் முன் ஹெட்லியின் அமெரிக்க விசாவை மேலும் 5 ஆண்டு காலம் நீட்டிக்கவும் ராணா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளார். ராணாவும், அவரது மனைவியும் டாக்டர்கள். அமெரிக்காவில் அவர் பல்வேறு தொழில்களை செய்து வந்தார். மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரும் கடந்த 2009 அக்டோபரில் அமெரிக்க போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony