முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல்: ராசா - கனிமொழியிடம் இன்று வாக்குமூலம் பதிவு

ஞாயிற்றுக்கிழமை, 4 மே 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,மே.6 - 2ஜிஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் தி.மு.க. தலைவர் கருணாநிதி மகள் கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 17 பேரிடம் இன்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யும் பணி தொடங்குகிறது. 

இந்தியாவில் பல்வேறு ஊழல்கள் அரங்கேறி உள்ளன. போபார்ஸ், நீர்மூழ்கி கப்பல் ஊழல்,முத்திரைத்தாள் மோசடி என்று பல ஊழல்கள் அரங்கேறி உள்ளன. இந்த ஊழல்களை எல்லாம் தூக்கிச்சாப்பிடும் அளவுக்கு நடந்த ஊழல்தான் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழல். காரணம், இந்த ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு ரூ.1.76 லட்சம் கோடியாகும். முதலில் வந்தவருக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது. முறைப்படி ஏலம் விடாமல், இஷ்டத்திற்கு ஒதுக்கீடு செய்ததால் நாட்டுக்கு இந்த இழப்பு ஏற்பட்டது. இந்த குற்றச்சாட்டை ஆரம்பத்தில் அப்போதைய மத்திய அமைச்சர் ஆ.ராசா மறுத்தார். இப்போதும் மறுத்துக்கொண்டுதான் இருக்கிறார். ஆனால் தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஆ.ராசா கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அதன் பிறகு கலைஞர் டி.வி.க்கு 214 கோடி கைமாறிய விவகாரம் தொடர்பாக கருணாநிதி மகள் கனிமொழியும் கைது செய்யப்பட்டு அதே திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இது தொடர்பான வழக்கில் சமீபத்தில் ஆ.ராசா, கனிமொழி,தயாளு ஆகியோருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியது நினைவு இருக்கலாம். கனிமொழி, தயாளு அம்மாள் ஆகியோர் கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்கள். சரத்குமார் ரெட்டியும் மற்றொரு பங்குதாரர். அந்த அடிப்படையில் இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் சுப்ரீம்கோர்ட்டின் மேற்பார்வையில் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைதான ஆ.ராசா, கனிமொழி மற்றும் பலரும் படிப்படியாக நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்கள். இதனிடையே இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலா சி.பி.ஐ.சிறப்பு நீதிமன்றம் 825 பக்கங்கள் கொண்ட 1718 கேள்விகளை தயாரித்து அவற்றை கனிமொழி, ராசா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவரிடம் வழங்கியது. இவற்றை படித்துப்பார்க்க அவகாசம் வேண்டும் என்று கனிமொழியும் ராசாவும் கோரினர். ஆனால் கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிபதி அதை கண்டித்தார். திட்டமிட்டபடி மே 5-ம் தேதி வாக்குமூலம் பதிவு செய்யப்படும்.காலதாமதம் செய்யும்போக்கை அனுமதிக்க முடியாது என்று நீதிபதி சைனி கண்டித்தார். அதன்படி இன்று கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 17 பேரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்யும் பணி தொடங்கும் என்று தெரிகிறது. ஏற்கனவே 153 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டவிட்டது. தொழிலதிபர் அம்பானி, இடைத்தரகர் நீராராடியா போன்றவர்களிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுவிட்டன. இந்த சூழ்நிலையில் இன்று ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்