முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2ஜி ஊழல் வழக்கு: பல்வாவுக்கு சிபிஐ நீதிபதி எச்சரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 11 மே 2014      ஊழல்
Image Unavailable

 

புது டெல்லி, மே 12 - நீதிமன்றம் எழுப்பும் கேள்விகள் புரியவில்லை எனக் கூறி ஏமாற்றும் வகையில் நடந்து கொண்டால் சிறை செல்ல நேரிடும் என்று 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் மேம்பாட்டாளர் ஷாஹித் உஸ்மான் பல்வாவுக்கு சிபிஐ சிறப்பு நீதிபதி ஓ.பி. ஷைனி எச்சரிக்கை விடுத்தார். 

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, சித்தார்த் பெஹூரா, சந்தோலியா ஆகியோரை தொடர்ந்து ஷாஹித் உஸ்மான் பல்வா வாக்குமூலம் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் நீதிபதி எழுப்பி உள்ள கேள்விகளை புரிந்து கொண்டு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வா நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை நீதிபதி ஷைனி ஏற்றுக் கொண்டார். 

இதையடுத்து பல்வாவுக்கு நீதிமன்றம் அளித்த அனுமதியை மேற்கோள்காட்டி அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மற்றவர்களும் தங்கள் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய நீதிபதியிடம் அனுமதி பெற்றனர். இதன்படி கரீம் மொரானி, ராஜீவ் அகர்வால், சஞ்சய் சந்திரா, வினோத் கோயங்கா, மாநிலங்ளவை திமுக உறுப்பினர் கனிமொழி ஆகியோர் தங்கள் பதிலை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்து வாக்குமூலத்தை பதிவு செய்தனர். 

ஷாஹித் பல்வா தாக்கல் செய்த எழுத்துப்பூர்வ பதிலில் எழுத்துப் பிழைகள் இருந்ததால் அவற்றை சரி செய்து மீண்டும் தாக்கல் செய்யும்படி அவருக்கு நீதிபதி ஷைனி உத்தரவிட்டார். ஆனால் அவர் தாக்கல் செய்த பதில்களும் தெளிவாக இல்லை. அது பற்றி நீதிபதி கேட்டதற்கு பல்வேறு கேள்விகள் புரியவில்லை என்று பல்வா கூறினார். 

இதையடுத்து அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்படும் நடைமுறைகளை நீதிபதி ஷைனி மீண்டும் தொடங்கினார். அப்போது பல்வா மீண்டும் என்னிடம் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் புரியும்படியாக இல்லை. வேறு வடிவில் கேட்க முடியுமா? என்று கோரினார். அவரது இந்த நடவடிக்கைக்கு சிபிஐ சிறப்பு வழக்கறிஞர் லலித் கடும் ஆட்சேபம் தெரிவித்தார். 

பல்வாவின் செய்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதுவரை 130 கேள்விகளுக்கு மட்டுமே அவர் பதில் அளித்துள்ளார். மற்ற கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நீதிமன்ற விசாரணை நேரத்தை தாமதப்படுத்த பல்வா முயற்சிக்கிறார் என்று லலித் குற்றம் சாட்டினார். இதை தொடர்ந்து நீதிபதி ஷைனி, பல்வாவின் நடவடிக்கையால் அவர் மீது நான் நம்பிக்கை இழந்து விட்டேன். இந்த வழக்குக்கு அவர் ஒத்துழைப்புதர கூடாது என்கிற ரீதியில் செயல்படுகிறார். எனது பொறுமைக்கு ஓர் எல்லை உண்டு. கேள்விகள் புரியவில்லை என்று கூறும் பல்வா, எந்த புரிதலுடன் ஏற்கனவே 500 கேள்விகளுக்கான பதிலை தாக்கல் செய்தார். 

இப்போது 130 கேள்விகளுக்கு பதில் தெரிவித்துள்ளார். மிக பெரிய தொழில் அதிபர் என கூறி கொள்ளும் பல்வா, நீதிமன்றத்தை ஏமாற்ற நினைக்கிறார். அவர் நீதிமன்றத்துக்கு வெளியே இருப்பதை விட சிறைக்கு செல்ல தகுதியானவராக இருக்கிறார். நீதிமன்றத்தை ஏமாற்ற நினைத்தால் சிறை செல்ல நேரிடும் என்று அவரை எச்சரிக்கிறேன் என்றார் நீதிபதி ஷைனி. இதையடுத்து பல்வாவும் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் அகர்வாலும் நீதிபதியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர். கேள்விகள் புரியவில்லை என கூறுவதில் உண்மை உள்ளது. உள்நோக்கத்துடன் இவ்வாறு செயல்படவில்லை என இருவரும் கூறினர். இருப்பினும் அதை ஏற்காத நீதிபதி ஷைனி, பல்வா விவகாரத்தில் (இன்று) திங்கட்கிழமை முடிவெடுப்பதாக கூறி வழக்கை ஒத்திவைத்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்