முக்கிய செய்திகள்

சைதாப்பேட்டை துணை நடிகை கொலை

புதன்கிழமை, 29 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.29 - சென்னை சைதாப்பேட்டையில் துணை நடிகை கொல்லப்பட்ட வழக்கில் கள்ளக்காதலன் சுரேஷ் மும்பையில் ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான். பிரேத பரிசோதனை முடிந்த துணை நடிகையின் உடலை வாங்க கணவன் மறுத்துவிட்டார். இதுபற்றிய விபரம் வருமாறு:-

சென்னை சைதாப்பேட்டை தர்மராஜா கோவில் தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதன் (35). கம்பி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் மும்பையை சேர்ந்த சினிமா துணை நடிகை அஸ்வின் (28) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின் சென்னையில் குடியேறிய வைத்தியநாதன் அஸ்வின் தம்பதிகளுக்கு 4 வயதில் திவ்யன் என்ற ஆண் குழந்தை உள்ளது. திவ்யன் மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கிறான். தினமும் அஸ்வினி பள்ளியிலிருந்து மகனை அழைத்து வருவார்.

வைத்தியநாதன் அத்தை மகன் சுரேஷ் (27). இவன் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தான். அடிக்கடி வைத்தியநாதன் வீட்டிற்கு வருவான் தங்குவான். இதில் சுரேஷூக்கும், அஸ்வினிக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வளர்ந்த கள்ளத்தொடர்பு பற்றி அக்கம்பக்கம் தெரிய வந்துள்ளது. வீட்டு உரிமையாளர் வைத்தியநாதனை அழைத்து அவரது மனைவி நடத்தை சரியில்லை என்று கூறி வீட்டை காலி செய்ய சொல்லி இருக்கிறார்.

இதனிடையே கடந்த வாரம் அஸ்வினிக்கு பிறந்தநாள். அன்று மகன் திவ்யனை பள்ளியில் விட்டுவிட்டு கள்ளக்காதலன் சுரேஷூடன் வெளியே சுற்றிவிட்டு மதியம் வீடு திரும்பி உள்ளார். பின்பு கதவை பூட்டிக்கொண்டுள்ளனர். அப்பொழுது சுரேஷூக்கும் அஸ்வினிக்கும் தகராறு ஏற்பட்டு அஸ்வினியை கழுத்தறுத்து கொன்றுவிட்டு சுரேஷ் தப்பி ஓடிவிட்டான்.

இதுபற்றி சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷை தேடிவந்தனர். ஆரம்பத்தில் செல்போன் டவர்மூலம் சுரேஷ் வேலூர் பக்கம் போனது தெரியவந்தது. பின்பு சுரேஷ் செல்போனை சுவிட்ச் ஆப் செய்ததால் போலீசாரால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனிடையே நேற்று பிரேத பரிசோதனை முடிந்து உடல் வந்தபோது மனைவி அஸ்வினியின் உடலை வாங்க அவரது கணவர் மறுத்து விட்டார். இதனால் மும்பையிலிருந்து அஸ்வினியின் பெற்றோர் உடலை வாங்க வந்தனர்.

இதனிடையே மும்பையில் தாதர் ரெயில் நிலையம் அருகே ஓடும் ரெயில் முன் பாய்ந்து சுரேஷ் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதில் தலைவேறு உடல் வேறாக 2 துண்டுகளாகி சுரேஷ் பலியானான். இதுபற்றி சென்னை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: