முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரஜ் குரோவர் கொலை: நடிகை மரியா விடுதலை

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

மும்பை, ஜூலை - 4 - டி.வி. நிகழ்ச்சித் தயாரிப்பாளர் நீரஜ் குரோவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மரியா, அவருக்கு வழங்கப்பட்ட தண்டனைக் காலம் முடிவடைந்ததால் விடுதலை செய்யப்பட்டார். சினிமா வாய்ப்பு தேடி மும்பை வந்தவர் மரியா சூசைராஜ்(30). சில டி.வி. தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். அப்போது டி.வி. நிகழ்ச்சி தயாரிப்பாளர் நீரஜ் குரோவருக்கும் மரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. குரோவர் தான் தயாரிக்கும் டி.வி. நிகழ்ச்சிகளில் வாய்ப்பு தருவதாக கூறிவந்தார். இதனால் இவர்கள் இருவரும் நெருங்கிப் பழகினர். ஆனால் சொன்னபடி குரோவர் வாய்ப்பு எதுவும் கொடுக்கவில்லை. இதனால் மரியாவிற்கு குரோவரின் மேல் கோபம் ஏற்பட்டது. இதனை தனது காதலனும் கடற்படை அதிகாரியுமான எமிலி ஜெரோமிடம் கூறி வருத்தப்பட்டார் மரியா.
இந்நிலையில் கடந்த 2008 ம் ஆண்டு மே மாதம் 7 ம் தேதி மலாடில் உள்ள மரியாவின் வீட்டிற்கு நீரஜ் குரோவர் வந்தார். அதேசமயத்தில் ஜெரோமும் அங்கு வந்தார். அப்போது குரோவருக்கும் ஜெரோமுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது சண்டையில் முடிந்தது. இந்த சண்டையின்போது ஜெரோம் கத்தியை எடுத்து குரோவரை குத்தி கொலை செய்தார். பிறகு மரியாவும் ஜெரோமும் சேர்ந்து குரோவரின் உடலை துண்டு துண்டாக வெட்டி மும்பை அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீசிவிட்டனர். இந்த கொலை தொடர்பாக மரியாவும், ஜெரோமும் அந்த மே மாதம் 21 ம் தேதியே  கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி சந்த்வானி, கொலைத் தடயங்களை மறைத்த குற்றத்திற்காக மரியாவுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ஜெரோமிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார். இதில் மரியா ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில்  கழித்துள்ளதால் மரியா சுசைராஜ் மும்பை பைகுலா சிறையில் இருந்து நேற்று முன்தினம் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை சந்திக்க பத்திரிகையாளர்கள் மற்றும் பலரும் ஏராளமான அளவில் குவிந்திருந்தனர். ஆனால் பத்திரிகையாளர்களை சந்திக்க மறுத்த மரியா ஒரு காரில் ஏறி சென்றுவிட்டார்.
மரியாவின் வழக்கறிஞர் ஷரீப் ஷேக் இதுகுறித்து கூறுகையில், இ.பி.கோ. 201-வது பிரிவின் கீழ்(தடயங்களை அழித்தல்) மரியா ஏற்கனவே 3 ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவித்துவிட்டார். அவரது இளம் வயது காரணமாக அவருக்கு குறைந்த தண்டனை வழங்கும்படி நீதிபதியை கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்தார். ஜெரோம் இன்னும் 7 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வழக்கில் மரியாவுக்கும், ஜெரோமுக்கும் மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி சந்த்வானி, இந்த பணம் நீரஜ் குரோவரின் தந்தையிடம் வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
ஆனால் இந்த தீர்ப்பில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்று கூறியுள்ள குரோவரின் தந்தை அமர்நாத் குரோவர், இந்த தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து நீரஜ்ஜின் தாய் நீலம் கூறுகையில், விடுதலை செய்யப்பட்டுள்ள மரியாவால் என் உயிருக்கு எந்த நேரமும் ஆபத்து ஏற்படலாம் என்றும் அவரை மும்பையில் இருந்து வெளியேற அனுமதிக்கக் கூடாது. மரியா ஒரு பொய்யர். அவர் எங்களுக்கு எதிராக சதித்திட்டம் கூட தீட்டலாம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் பிரபல பாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா, மரியாவை வைத்து படம் ஒன்று எடுக்க விருப்பப்படுகிறேன் என்று கூறியுள்ளார். ஒரு நடிகை ஆவதற்கான முதிர்ச்சி சிறையில் இருந்த காலத்தில் அவருக்கு ஏற்பட்டிருக்கும். மேலும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் விளம்பரமும், மக்களுக்கு அவர் மேல் ஏற்பட்டுள்ள ஆர்வமும் நான் எடுக்கும் அந்த படத்தை வெற்றிப்படமாக மாற்றும் என்றும் வர்மா தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!