20-ந் தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜூலை.- 11 - வருகின்ற 20-ந் தேதி அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அ.தி.மு.க. கட்சி நடைபெற்ற பொதுத் தேர்தலில் தனி மெஜாரிட்டி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். அவர் 33 அமைச்சர்களை நியமித்து அவர்களக்கு இலாகாக்களை ஒதுக்கீடு செய்து அரசு பணிகளை தீவிரப்படுத்தினார்.  பதவியேற்றவுடன் தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்த மக்கள் நலத்திட்டங்களை அமுல்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டார். இலவச அரிசி, மீனவர்களுக்கு நிவாரணத் தொகை உயர்த்தி வழங்குதல், அரசு ஊழியர் கர்ப்பிணிகளுக்கு விடுப்பு போன்ற அரசு நலத்திட்டங்களை நிறைவேற்ற கோப்புகளில் கையெழுத்திட்டு நடைமுறை படுத்தினார். கிராமபுறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு பயன்தரும் வகையில் குடும்பத்தினருக்கு கறவை மாடுகள், ஆடுகள் வழங்கும் திட்டத்தில் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாளில் துவக்கி வைக்க உள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் 7.50 லட்சம் பேர் பயனடைவார்கள். இதனிடையே 27.3 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில்  இலவச பஸ் பாஸ் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கே சென்று போக்குவரத்துத்துறை அலுவலர்கள் புகைப்படம் எடுத்து அங்கேயே பஸ் பாஸ் வழங்கும் முறையை அமுல்படுத்தியுள்ளார். இதனால் மாணவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும்  மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு பதிவு முறையை பள்ளி, கல்லூரிகளிலேயே நடைமுறைப்படுத்தியது, என்ஜினியரிங் மாணவர்களுக்கு சென்னை- மதுரை என பிரித்து அந்தந்த பகுதிகளிலேயே வேலை வாய்ப்பு பதிவுகளை செய்ய உத்தரவு போன்ற திட்டங்களை நடைமுறைபடுத்தி வருகிறார். வருகின்ற 20-ந் தேதி 92 நலிந்த அண்ணா தொழிற்சங்க தொழிலாளர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் நிதியுதவி வழங்குகிறார்.  
இந்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 20-ந் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். கட்சியை பலப்படுத்தும் வகையில் கட்சி நிர்வாகிகள் மாற்றத்தையும் அவ்வப்போது செய்து வருகிறார். பல்வேறு கட்சி பணிகள் குறித்து அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்ய உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் வருகின்ற 20.7.2011 புதன் கிழமையன்று பிற்பகல் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள தலைமை நிலையத்தில் அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெறும் என்றும், அ.தி.மு.க. செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனி அழைப்பிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்: