ரூ.15 கோடியில் திருப்பணிகள் முடிவடைந்தது அழகர்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது

திங்கட்கிழமை, 11 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.- 11 - மதுரையைஅடுத்த அழகர்கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதைதரிசிக்க பல்லாயிரக்கணக்கானோர் திரளுகிறார்கள்.     மதுரையிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அழகர்கோவில். இங்குள்ள கள்ளழகர் கோவிலில் வீற்றிருக்கும் சுந்தர்ராஜபெருமாள் ஒவ்வொரு ஆண்டும் அழகர்கோலம் பூண்டு மதுரைக்கு விஜயம் செய்து சித்ராபவுர்ணமி அன்று வைகை இறங்கும் நிகழ்ச்சி உலக பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து அழகரை தரிசிப்பார்கள். இந்த திருக்கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பிறகு இன்று காலை 9.03 மணி முதல் 9.15மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. கும்பாபிஷேகத்தையொட்டி ரூ. 15 கோடி செலவில் திருப்பணிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளது. கோவில் எதிரே உள்ள அழகிய தெப்பக்குளம் மண்ணுக்குள்  புதையுண்டு கிடந்தது. அது கண்டறியப்பட்டு புது பொலிவு பெற்றுள்ளது. இதே போல் கோபுரங்கள் வண்ணம் தீட்டப்பட்டு சிலைகள் ஜொலிக்கிறது. கோபுரத்தில் உள்ள தங்க கலசங்கள் புதிய முலாம் பூசப்பட்டுள்ளது.கோவிலுக்குள்  உள்ள அனைத்து பகுதிகளும் மராமத்து செய்யப்பட்டுள்ளது.
   கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 6ம் தேதி மாலை திருக்கல்யாண மண்டபத்தில்  யாகசாலை பூஜைகள் துவங்கியது. 52 யாக குண்டங்களில், 45 வேதிகைகள் எனப்படும் கும்பமேடை அமைக்கப்பட்டு 75 வைகானஸ் அர்ச்சகர்களும், வேத,திவ்ய பிரபந்த பாசுரங்கள் பாடுவதற்காக 150 அர்ச்சகர்களும் என மொத்தம் 225 பேர் திருப்பதி, திருவில்லிபுத்தூர், திருக்கோஷ்டியூர், திருவல்லிக்கேணி, திருப்புல்லாணி உள்ளிட்ட கோவில்களில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். சுந்தரநாராயண பட்டர் மேற்பார்வையில் யாகசாலை பூஜைகள் நடந்து வருகின்றன. விழா ஏற்பாடுகளைஏ கோவில் அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாச்சலம், இணைஆணையர் சுதர்சன்,துணை ஆணையர் செல்வராஜ், கண்காணிப்பாளர் பகவதி மற்றும் கோவில் அதிகாரிகள் செய்து வருகிறார்கள். கும்பாபிஷேகத்தை கண்டு தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து நேற்று இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து குவிந்து விட்டனர். போலீஸ் எஸ்பி ஆஸ்ராகார்க் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்: