Idhayam Matrimony

மேலும் ஒரு புகார்: சக்சேனா மீது 3-வது வழக்கு பதிவு

செவ்வாய்க்கிழமை, 12 ஜூலை 2011      சினிமா
Image Unavailable

 

சென்னை, ஜூலை.12 - சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு பட அதிபர் சக்சேனா மீது மோசடி புகார் அளித்ததையடுத்து 3 வது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜாமீன் மனு விசாரணையும் இன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றிய விபரம் வருமாறு:- தீராத விளையாட்டு பிள்ளை பட விவகாரத்தில் தனக்கு பாக்கி தரவேண்டியதை திருப்பி கேட்டபோது தன்னை அறையில் அடைத்து வைத்து கொலை மிரட்டல் விடுத்து பணத்தை அபகரித்துக் கொண்டதாக சன் பிக்சர்ஸ் சக்சேனா மீது பட அதிபர் செல்வராஜ் புகார் அளித்ததன் பேரில் சக்சேனா கைது செய்யப்பட்டார். 

தன்னை மிரட்டி தாக்கி ரூ.25 லட்சம் பணத்தை பிடிங்கிக் கொண்டதாக சக்சேனா, அய்யப்பன் மற்றும் இன்னொரு கூட்டாளி மீது புகார் அளித்ததையடுத்து மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனிடையே சக்சேனாவின் பெயில் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே தியேட்டர் அதிபர்கள் எந்திரன் படம் விவகாரம் சந்பந்தமாக சன் பிக்சர்ஸ் மீதும், கலாநிதி மாறன் மீதும் புகார் அளித்தனர். சக்சேனா மீது ஏற்கனவே வேளச்சேரியில் பெண்ணை தாக்கிய வழக்கிலும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கிலும் போலீசாரால் எப்.ஐ.ஆர். போடப்பட்டு நிலுவையில் உள்ளது. இதில் பெண்ணை தாக்கிய வழக்கில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், செக்கர்ஸ் ஓட்டல் தாக்கப்பட்ட வழக்கில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவைகள் அனைத்துமே ஜாமீனில் வெளியே வர முடியாத வழக்குகள் ஆகும். 

இதனிடையே சக்சேனா விவகாரம் சம்பந்தமாக தமிழகம் முழுவதும் பாதிக்கப்பட்ட பட தயாரிப்பாளர்கள், தியேட்டர் அதிபர்கள் அனேகம் பேர் புகார் அளிக்க தயாராகி வருகிறார்களாம். 2 நாள் போலீஸ் விசாரணையில் சக்சேனா பல்வேறு விபரங்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது. சன் பிக்சர்ஸில் தான் ஒரு நிர்வாகி மட்டுமே, எனக்கு மேலே உள்ளவர்கள் சொன்னதை மட்டுமே செய்தேன். மேலுள்ளவர்கள் என்ன சொன்னார்களோ அதை செய்தேன். பட அதிபர்களிடம் பெற்ற பணத்தை மேலே உள்ளவர்களிடம் கொடுத்து விட்டேன் என்று கூறியதாக தெரிகிறது. 

இந்நிலையில் ஜாமீன் கேட்டு 2 வது முறையாக சக்சேனா மற்றும் அய்யப்பன் ஆகியோர் தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அதை மாஜிஸ்திரேட் இன்று ஒத்தி வைத்தார். இதனிடையே சக்சேனா மீது மேலும் ஒரு பட அதிபர்  ரூ.3.37 கோடி மோசடி செய்ததாக அளித்த புகாரின் பேரில் கோடம்பாக்கம் போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். 

கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியை சேர்ந்தவர் நேமிசந்த் ஜபக். இவர் பட அதிபர். நான் அவனில்லை, படிக்காதவன், பொக்கிஷம் மற்றும் தனுஷ், அனுஷ்கா நடித்த மாப்பிள்ளை படத்தை தயாரித்துள்ளார். கடந்த 2008-ம் ஆண்டு மாப்பிள்ளை பட விநியோகத்தின் கோவை விநியோக உரிமையை தன்னிடம் ரூ.3.37 கோடிக்கு விற்ற சக்சேனா பட விநியோகத்தை தராமல் நேரடியாக வெளியிட்டு பணத்தை சுருட்டியதாக புகார் ஒன்றை அளித்துள்ளார். இதுபற்றி கேள்வி கேட்ட தன்னை மிரட்டியதாகவும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து ஆட்சி மாற்றம் வரும் வரை தன்னால் எதுவும் செய்ய முடியாததால் தற்போது புகார் அளிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து சக்சேனா மீது கோடம்பாக்கம் போலீசார் 420, 406, 386, 506(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

மேலும் சக்சேனா விவகாரத்தில் பொல்லாதவன், ஆடுகளம் தயாரிப்பாளர் கதிரேசன், வல்லக்கோட்டை பட தயாரிப்பாளர், முத்துக்கு முத்தாக சேட்டிலைட் ரைட்ஸ் சம்பந்தமாக டைரக்டர் ராசு மதுரவன் ஆகியோர் புகார் அளிக்க தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சென்னையில் உள்ள பிரபல திரையரங்க உரிமையாளரும், விநியோகத் துறையில் ஜாம்பவானுமான முக்கிய புள்ளி ஒருவரும் புகார் அளிக்க தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. நாளுக்கு நாள் தொடர்கதை போல் சக்சேனா மீது மேலும், மேலும் வழக்குகள் குவிந்து வருகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்