முக்கிய செய்திகள்

கூட்டணி குறித்து கருணாநிதி - ஆசாத் நேரடி பேச்சு

வியாழக்கிழமை, 3 மார்ச் 2011      தமிழகம்
karu-Azad

 

சென்னை, பிப்.3 - தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறிக்கு முடிவு கட்டியாக வேண்டிய நிர்பந்தத்தில் இரண்டு கட்சிக்காரர்களும் வந்துள்ளதால் ஐவர் குழுவிற்கு கல்தா கொடுத்து விட்டு டெல்லியிலிருந்து குலாம்நபி ஆசாத் நேரடியாக வந்து கருணாநிதியிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் காங்கிரசுக்கு 60 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என தெரிகிறது.

உறுதியான கூட்டணி, இறுதியான கூட்டணி, ஒற்றுமையின் சின்னம் என்று பேசப்பட்ட தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு பற்றி இருதரப்பும் குழுக்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தின. இதில் பல்வேறு குத்து வெட்டுக்கள் , முட்டல் மோதல்கள் முரண்பாடுகள் வெடித்தது.

ஒப்புக்கு சப்பாணி ஐவர் குழு இரண்டு மூன்று முறை டெல்லி சென்று சோனியா, ராகுலிடம் ஆலோசனை பெற்று வந்தது. காங்கிரஸ் 78 இடங்களுக்கு மேல் கேட்டது. ஸ்டியரிங் கமிட்டி துணை முதல்வர், ஆட்சியில் பங்கு என நெருங்கியது.

தி.மு.க. காங்கிரசுக்கு நெருக்கடி தர பா.ம.க.வை கூட்டணியில் சேர்த்து 31 இடங்களை கொடுத்து இது மேலும் பிரச்சினையை பெரிதாக்கிவிட்டது. பா.ம.க.வுக்கு 31, விடுதலை சிறுத்தைகளுக்கு 10 மற்ற சிறு கட்சிகளுக்கு 5-க்கும் மேற்பட்ட தொகுதிகளை கொடுத்த தி.மு.க. மீதமுள்ள 188 இடங்களில் காங்கிரசுக்கு 78 இடங்களை கொடுத்து தி.மு.க. 110 தொகுதிகளில் போட்டியிட்டால் மெஜாரிட்டி தொகுதிக்கு 118 இடங்கள் வேண்டும். 110 தொகுதியில் போட்டியிடுவதன் மூலம் கண்டிப்பாக காங்கிரஸ் தயவை நம்பவேண்டிய நிலை தி.மு.க.வுக்கு வந்துள்ளது. இதனால் தி.மு.க. தரப்பிலும் இழுத்து பிடித்தபடி இருந்தனர். கூட்டணியே உடையும் கட்டத்தினை அடைத்தது. ஆனால் காங்கிரஸ் தயவு இல்லாமல் வெளியே வந்ததால் பிரச்சினை என்பதால் கருணாநிதி பொறுத்து கொண்டு தனது எண்ணத்தை தி.க.வீரமணி மூலம் அறிக்கையாக வெளியிடவைத்தார்.

இந்நிலையில் திடீரென்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் மொத்தம் 40 நாட்களே உள்ளதால் அதிர்ச்சி அடைந்த தி.மு.க. காங்கிரஸ் உடனே ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டிய கட்டாயத்தில் ஐவர் குழுவுக்கு கல்தா கொடுத்துவிட்டு மேலிட பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத்தை சோனியா டெல்லியிலிருந்து பேச்சுவார்த்தை நேற்று அனுப்ப முடிவெடித்துள்ளார். குலாம்நபி ஆசாத் நேரடியாக கருணாநிதியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்த சந்திப்பில் கட்டாயம் தொகுதிகளை இறுதிபடுத்தி ஆகவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 60 தொகுதிகளை பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவிக்கும் என தெரிகிறது. இதன் மூலம் தி.மு.க. 118 தொகுதிகளில் நிற்காமல் என தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்: